குப்பை வாகனம் இல்லாததால் கழிவுகள் அகற்றப்படுவதில்லை நகராட்சி இயக்குநரிடம் தி.மு.க., கவுன்சிலர் வாக்குவாதம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பை கழிவுகள் சரிவர அகற்றப்படவில்லை எனவும், போதிய வாகனங்கள் இல்லாமல் ஒப்பந்த நிறுவனம் செயல்படுவதாகவும், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் மதுசூதன்ரெட்டியிடம், தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக், நேற்று வாக்குவாதம் செய்தார். காஞ்சிபுரம் மாநகராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் மதுசூதன்ரெட்டி, ஆலோசனை செய்ய காஞ்சிபுரம் வந்திருந்தார். காஞ்சிபுரத்தில் அமைய உள்ள புதிய புறநகர் பேருந்து நிலையம், புதிய மாநகராட்சி கட்டடம் கட்டும் பணி, மஞ்சள்நீர் கால்வாய் சுவர் அமைக்கும் பணி, அன்னை அஞ்சுகம் கட்டடம் கட்டும் பணி உள்ளிட்டவற்றை நேற்று நேரில் பார்வையிட்டார். அன்னை அஞ்சுகம் கட்டடம் கட்டும் பணியை அவர் பார்வையிட்டபோது, ''மாநகராட்சியின் 48வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக், “நகராட்சி இயக்குநரிடம் குப்பை, கழிவுகள் சரிவர அகற்றப்படுவதில்லை,''என, முறையிட்டார். ''குப்பை கிடங்கை பார்வையிட வேண்டும் எனவும், குப்பை அகற்றும் வாகனங்கள் போதிய அளவு இல்லை எனவும் கூறினார்.மேலும் இதுபோன்ற சூழலில் தனியார் நிறுவனத்திற்கு ஏன் ஒப்பந்தம் வழங்க வேண்டும்,'' என்றார். அதற்கு, இயக்குநர் மதுசூதன்ரெட்டி, சொல்ல வேண்டியவை நீங்கள் சொல்லலாம்; இதுபோல கேள்வி எழுப்பினால் எப்படி,'' என்றார். ''மாநகராட்சி பிரச்னைகளை உங்களிடம் தானே சொல்ல முடியும் என, கார்த்திக் பதிலளித்தார். இவ்வாறு இருவருக்கும் இடையேயான பேச்சு, வாக்குவாதமாக மாறிய பின், பார்வையிடுவதாக கூறி, இயக்குநர் மதுசூதன்ரெட்டி அங்கிருந்து புறப்பட்டார்.