வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம்: போலீசார்
காஞ்சிபுரம்:கோடை காலம் துவங்கி இருப்பதால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. இந்த வெயில் உஷ்ணத்தால், கான்கிரீட் வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளில் வெக்கை அதிகமாக உள்ளது.இரவு துவங்கி, நீண்ட நேரமாகியும் வெக்கை குறைந்த பாடில்லை. இதை தவிர்க்க, நகரங்களில், 'ஏசி' பயன்படுத்த துவங்கியுள்ளனர். கிராமப்புறங்களில், நல்ல காற்றோட்டமாக இருக்கும் என மொட்டை மாடிகள், மரத்தடி நிழலில் படுத்து உறங்குகின்றனர்.ஒரு சிலர், வீட்டிற்குள் காற்றோட்டமாக இருக்கட்டும் என, கதவை திறந்து வைத்து படுத்து உறங்குகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடையாளம் தெரியாக மர்ம நபர்கள் சிலர் வீடு புகுந்து, வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்று விடுகின்றனர்.உதாரணமாக, காஞ்சிபுரம் அடுத்த, கம்மவார்பாளைம் கிராமத்தில், தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 11 சவரன் நகை திருடி சென்று உள்ளனர். இதேபோல, பல்வேறு கிராமங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இதை தவிர்க்க, கிராமப்புறங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என, காவல் துறையினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:காற்றோட்டமாக இருக்கட்டும் என வீடு திறந்து போட்டு துாங்குவது, வீடு பூட்டு போட்டுவிட்டு மாடியில் துாங்குவதை தவிர்க்க வேண்டும்.விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருக்க, கிராமப்புற மக்கள் அவசியமாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.