கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் காஞ்சியில் நோய் பரவும் அபாயம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சாம்பசிவம் தெருவில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால், அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி, 24வது வார்டுக்கு உட்பட்ட சாம்பசிவம் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில், குழாய் வாயிலாக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த சனிக்கிழமை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய நாள். அன்று குடிநீர் விநியோகம் செய்யாமல், இரண்டு நாள் தாமதமாக நேற்று முன்தினம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அந்த குடிநீரில், கழிவுநீர் கலந்து, கருமை நிறத்தில் துர்நாற்றத்துடன் வந்தது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாச டைந்த குடிநீரை பயன்படுத்துவோருக்கு, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.