உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், தனியார் கல் குவாரிகள் மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்கும் பகுதிகளிலும், அங்கிருந்து பல பகுதிகளுக்கு லாரிகள் செல்லும் கிராமப் பகுதிகளிலும் புழுதி ஓயாது பறந்து கொண்டே இருக்கிறது. காற்று மாசு அளவீட்டு கருவி நிறுவ, கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில் மதுார், சித்தாலப்பாக்கம், சிறுமையிலுார், சிறுதாமூர், அருங்குன்றம், குண்ணவாக்கம், பழவேரி, பினாயூர், பொற்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற தனியார் கல் குவாரிகள் மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.இப்பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளில் வெடிவைத்து பாறை கற்கள் உடைத்து அவற்றை அதே பகுதிகளிலும் அல்லது சுற்றுவட்டார பகுதிகளிலும் செயல்படும் கிரஷர்களில் அரைத்து எம்.சாண்ட் மற்றும் பல வகையான ஜல்லிகற்கள் தயாரிக்கின்றனர்.அவற்றை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருமானம் பார்க்கின்றனர். விதிமுறை மீறல்
இந்நிலையில், இப்பகுதிகளில் இயங்கும் பல்வேறு தொழிற்சாலைகளில் அரசு விதிமுறைகள் மீறப்பட்டு கனிமங்கள் கொள்ளை போவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், உத்திரமேரூர் சுற்றுவட்டார விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.மேலும், சில தனியார் கல் குவாரிகளில் பாறைகளை உடைத்து எடுக்க அதிசக்தி வாய்ந்த வெடி பயன்படுத்துவதால் பூமி அதிர்வு ஏற்பட்டு வீடுகள் பாதித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சுற்றுச்சூழல் மாசு
இவை ஒருபுறம் இருக்க, தனியார் கல் குவாரிகளில் வெடி வைக்கும் போது வெளியேறும் புகை, காற்றின் மூலம் குடியிருப்பு மற்றும் சாலை பகுதிகளில் பரவுவதால், சுற்றுச்சூழல் மாசு அடைந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.இதேபோன்று, மதூர், அருங்குன்றம், பட்டா, பழவேரி, பினாயூர், திருமுக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில், சாலையோரம் இயங்கும் கிரஷர்களில் இருந்து, தினசரி புகை மற்றும் மண்புழுதி வெளியேறுகிறது.இந்த புகை மற்றும் மண்புழுதி தொடர்ந்து சாலைகளில் பறந்து வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து, எம் -- சாண்ட் போன்றவை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் மூலமாகவும் கிராம சாலைகளில் புழுதி பறந்த வண்ணம் உள்ளன.இதனால், அச்சாலைகளில் செல்வோர் கண்களை பதம் பார்த்து இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.மேலும், குழந்தைகள் முதல், பெரியோர் வரை மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு பாதிக்கபடுகின்றனர்.இதனால், கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்கும் பகுதிகளிலும், மண் புழுதிகள் பறக்கும் சாலை பகுதிகளிலும் மாசு அளவீட்டு கருவி பொருத்தி சுவாசிக்கும் காற்று தரமானதுதானா என்பன குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என, கிராம வாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் பிரகாஷ் கூறியதாவது:உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை. அவ்வாறு மாசு பிரச்னை உள்ள பகுதிகளில் நிரந்தரமாக மாசு அளவீட்டு கருவி பொருத்த இயலாது.மாசு ஏற்படுத்தும் இடம் குறித்து குறிப்பிடும் பட்சத்தில், மனுவாக அளித்தால் அதுகுறித்து ஆய்வு செய்து அப்பகுதியில் காற்று மாசு குறித்த அளவை கணக்கிடலாம். அதன் முடிவின் அடிப்படையில் காற்று மாசு குறைக்க அரசின் பரிந்துரைபடி நடவடிக்கை மேற்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.