இ -- சேவை மையத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்
திருமுக்கூடல்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் காலனியில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் 23 குழந்தைகள் பயில்கின்றனர். இந்த அங்கன்வாடி மையத்திற்காக பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்தது.இதனால், விபத்து அபாயம் தடுக்கும் பொருட்டு சேதமான அக்கட்டடம் ஊராட்சி நிர்வாகம் வாயிலாக கடந்த ஆண்டு இடித்து அகற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, திருமுக்கூடல் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள ஊராட்சி சேவை மையம் கட்டடத்தில் தற்போது அங்கன்வாடி மையம் செயல்படுத்தப்படுகிறது.ஊராட்சி நிர்வாக பணிகளுக்கான தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் ஊராட்சி சேவை மையத்தை பயன்படுத்தக்கூடும்.இதனால், திருமுக்கூடல் அங்கன்வாடி மையத்திற்கென புதிய கட்டட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதி ஊராட்சி தலைவர் மஞ்சுளா கூறியதாவது:அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டட வசதி தேவை குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து, விரைவாக பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.