ஏகனாபுரம் இரவு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
ஏகனாபுரம்:சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைய உள்ளது. இதற்கு, 12 கிராமங்களில், 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில், 3,500 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலங்களாகும். மீதம், தனியாருக்கு சொந்தமான விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளாக உள்ளன.இந்த நிலையில், விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தில் மக்கள் இரவு போராட்டம் மற்றும் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவுடன், 1,019வது நாள் போராட்டம் எட்டி உள்ளது.இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடந்து வருவதால், அசாதாரண நிலை உருவாகி உள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு, இரவு நேர போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.மேலும், வாரந்தோறும், புதன்கிழமையில் இரவு கூட்டம் மட்டும் நடைபெறும் என, போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.