பேருந்து மோதி விபத்து :மூதாட்டி பரிதாப பலி
மறைமலை நகர்: மறைமலை நகரில், ஜி.எஸ்.டி., சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, மாநகர பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறைமலை நகர் நகராட்சி, பேரமனுார் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள், 80. இவர், நேற்று, பிற்பகல் 12:15 மணியளவில், மறைமலை நகரில் இருந்து பேரமனுார் நோக்கி நடந்து சென்றார். மறைமலை நகர் ரயில் நிலையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில், சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, மறைமலை நகரில் இருந்து, தாம்பரம் நோக்கிச் சென்ற தடம் எண்118, மாநகர பேருந்து, கன்னியம்மாள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தாம்பரம் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாநகர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்து நரிடம் விசாரிக்கின்றனர்.