சாலை மைய தடுப்பில் மின் கம்பங்கள் அமைப்பு
காஞ்சிபுரம்:சாலை மைய தடுப்புகளில் மின் கம்பம் அமைக்கும் பணியில், சாலை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - சதுரங்கப்பட்டினம் சாலை, 448 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இருப்பினும், வாலாஜாபாத் புறவழிச் சாலை போடும் பணிக்கு, கிதிரிப்பேட்டை மற்றும் புளியம்பாக்கம் பகுதியில், ரயில்வே மேம்பாலம் இணைக்கும் பணி நிறைவு பெறவில்லை. எனினும், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே, நான்குவழிச் சாலை விரிவுபடுத்தும் பணி, 80 சதவீதம் நிறைவு பெற்றிருப்பதால், சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன. சாலை மைய தடுப்புகளின் நடுவே, மின் கம்பங்கள் அமைப்பதற்கு ஆங்காங்கே இடைவெளி விட்டுள்ளனர். நேற்று அந்த இடங்களில் மின் கம்பங்கள் அமைத்து, மைய தடுப்பு சுவரில் கான்கிரீட் போடும் பணியில் சாலை விரிவாக்க பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பழையசீவரம் பகுதியில் சாலை மைய தடுப்பில் மின் கம்பம் அமைத்து கான்கிரீட் போட்டு வருகின்றனர். மின் விளக்கு பொருத்திய பின், மின் இணைப்பு வழங்கி மின் விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்கப்படும் என, சாலை விரிவாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.