வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் ரூ.4.50 கோடியில் அவசர சிகிச்சை வார்டு
வாலாஜாபாத்:காஞ்சிபுரம்- - படப்பை சாலையில் அமைந்துள்ளது வாலாஜாபாத் அரசு மருத்துவமனை. இங்கு, வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த தாலுகா மருத்துவமனைக்கு, 100க்கும் மேற்பட்டோர் தினசரி புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். விபத்து மற்றும் அவசர சிகிச்சை பெற வேண்டுமெனில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.விபத்து மற்றும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி என உயிருக்கு ஆபத்தான நிலையில் வருவோருக்கு இங்கு உடனடி சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை சிறப்பு பிரிவு ஏற்படுத்த பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.இதை ஏற்று, தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்த்திருத்த திட்டத்தின்கீழ், 4.5 கோடி ரூபாய் செலவில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான வார்டு புதியதாக கட்டமைக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு, காஞ்சிபுரம் பொதுப்பணி துறை அதிகாரிகள் மற்றும் உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர் உள்ளிட்டோர் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு செய்தனர்.அப்போது, மருத்துவமனை வளாகத்தில், பழுதான பயன்பாடற்ற பழைய கட்டடங்களை அகற்றி, அந்த இடத்தில் கூடுதல் கட்டடம் கட்டுதவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, வாலாஜாபாத் அரசு மருத்துவ அலுவலர் விமலா கூறியதாவது:வாலாஜாபாத்தில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைகள் அளிப்பதற்கான வார்டுகள் நவீனமயமாக்கப்பட உள்ளது. இதுகுறித்து, கடந்த சட்டசபை கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகி, அதை தொடர்ந்து புதிய கட்டட வசதிக்காக 4.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.சிடி ஸ்கேன், செயற்கை சுவாச கருவி, எக்ஸ்-ரே, ஸ்கேன் கருவி மற்றும் கூடுதல் மருத்துவர், உதவியாளர்கள் போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.இதன் வாயிலாக விபத்து, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் விஷமுறிவு உள்ளிட்ட அவசர நோய்க்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியும். கூடுதல் கட்டடம் கட்ட தற்தபோது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக, ஏற்கனவே அங்குள்ள பழைய கட்டடங்கள் அடுத்த சில தினங்களில் அகற்றப்பட உள்ளது இதையடுத்து, விரைவில் கூடுதல் கட்டடத்திற்கான பணிகள் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.