புதிதாக வி.ஏ.ஓ., அலுவலகம் குண்ணத்தில் கட்ட எதிர்பார்ப்பு
ஸ்ரீபெரும்புதுா:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்ணம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, சுங்குவார்சத்திரம் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையோரம், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வந்தது.இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் வாலாஜாபாதில் இருந்து சுங்குவார்சத்திரம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த வி.ஏ.ஓ., அலுவலகம் மீது மோதியது. இதில், கட்டடத்தின் ஒரு பகுதி சுவர் உடைந்து விழுந்தது.இதனால், இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆவணங்கள் அனைத்தையும் தற்காலிகமாக கிராம இ- - சேவை மையத்தில் மாற்றப்பட்டு, தற்போது வரை செயல்பட்டு வருகிறது.இதனால், குண்ணம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், பட்டா பெயர் மாற்றம், புதிய பட்டா பெறுதல் மற்றும் இதர வருவாய் துறை சம்பந்தப்பட்ட சான்றுகள் பெற சிரமம் அடைந்து வருகின்றனர்.அதேபோல், இ- - சேவை மையத்தில் போதிய இடவசதி இல்லாததால், ஆவணங்களை பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.எனவே, வி.ஏ.ஓ., அலுவலக கட்டத்தை இடித்து அப்புறப்படுத்தி, புதிதாக கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.