நத்தாநல்லுார் ஏரி மண் குவாரியை முற்றுகையிட்ட விவசாயிகள்
வாலாஜாபாத்:நத்தாநல்லுார் ஏரி மண் குவாரியை விதிகளுக்கு உட்பட்டு இயக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள், மண் குவாரி பகுதியில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லுார் கிராமத்தில் நீர்வளத் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில், அரசு அனுமதியோடு தனியார் மண் குவாரி, 10 நாட்களாக இயங்குகிறது. இக்குவாரியில் விதிமுறைகளை மீறி மண் எடுப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று மதியம் நத்தாநல்லுார் ஏரியில் குவிந்தனர். ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவிலான ஆழம் மட்டும் தோண்டி மண் அள்ள வேண்டும். ஒரே இடத்தில் அதிக ஆழம் தோண்டுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஆழம் தோண்டுவதால் பள்ளங்கள் ஏற்பட்டு மழைக்காலத்தில் ஏரியில் பரவலாக தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, ஏரியில் சமமான அளவிற்கு நீர்பிடிப்பு பகுதி முழுக்க பரவலாக துார்வாரி மண் எடுக்க வேண்டும் என கோரி முற்றுகையிட்டனர். தகவலறிந்த வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று விவசாயிகளிடம் சமாதான பேச்சு நடத்தினர். விதிகளுக்கு உட்பட்டு மண் குவாரி செயல்பட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.