சேதமான கீழ்ஒட்டிவாக்கம் ஏரிக்கரை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
கீழ்ஒட்டிவாக்கம்:கீழ்ஒட்டிவாக்கம் பீமேஸ்வரர் கோவில் அருகில் சேதமடைந்த நிலையில் உள்ள ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம், கீழ்ஒட்டிவாக்கம் ஏரிக்கரையை ஒட்டி புவனேஸ்வரி அம்பாள் சமேத பீமேஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலுக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இதனால், பக்தர்கள் ஏரிக்கரையின் மீது உள்ள ஒத்தையடி பாதையில் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவில் அருகில் உள்ள ஏரிக்கரையின் ஒரு பகுதி மண் அரிப்பு ஏற்பட்டு, ஏரிக்கரை பலமிழந்து உள்ளதால், நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவ மழைக்கு கீழ்ஒட்டிவாக்கம் ஏரி முழுமையாக நிரம்புவதற்குள், மண் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில், ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டு பீமேஸ்வரர் கோவில் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் மழை வெள்ளநீரால் மூழ்கும் சூழல் உள்ளது. எனவே, பீமேஸ்வரர் கோவில் அருகில் மண் அரிப்பால் சேதமடைந்து, பலமிழந்த நிலையில் உள்ள கீழ்ஒட்டிவாக்கம் ஏரிக்கரையை பலப்படுத்த நீர்வள ஆதுார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.