காட்டு பன்றிகளை தடுக்க ஒளிரும் மின்விளக்குகள்
குருமஞ்சேரி:சீட்டணஞ்சேரி சுற்று வட்டாரத்தில் சாகுபடி பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் நிலங்களில் மின் விளக்குகளை விவசாயிகள் ஒளிர செய்துள்ளனர். விவசாயிகளின் எதிரியாக உருவெடுத்துள்ள காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். சாகுபடி செய்துள்ள நிலங்களின் வரப்புகளை சுற்றிலும் வண்ணமயத்தில் துணிகள் கட்டுதல், நிலத்தின் மையப்பகுதியில் மனித உருவிலான பொம்மைகள் அமைத்தல், சில இடங்களில் ஒலி பெருக்கி வாயிலாக சத்தமிட செய்தல் போன்ற பயிர்களை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். எனினும் எதற்கும் கட்டுப்படாத காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால், நெல், வேர்கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர் வகைகள் பாதிப்பிற்குள்ளாகின்றன. இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி மற்றும் பினாயூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி நிலங்களை சுற்றிலும் மின் விளக்குகள் ஒளிரச்செய்துள்ளனர். கண்களை மங்க செய்யும் வகையில், வெள்ளை நிறத்தில் ஒளிரும் இந்த மின் விளக்குகளால் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த இயலும் என, நம்புவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.