ஏரி உபரிநீர் கால்வாயை மூடிய கோரை புற்கள் குன்றத்துார் சாலையில் வெள்ள பாதிப்பு அபாயம்
ஸ்ரீபெரும்புதுார்:பிள்ளைப்பாக்கம் ஏரியில் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரிநீர் செல்லும் கால்வாய் முழுதும் கோரை புற்கள், செடிகள் வளர்ந்துள்ளதால், குன்றத்துார் சாலையில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் பிள்ளைப்பாக்கம் ஏரி, 600 ஏக்கர் நீர் பிடிப்பு பரப்பளவு கொண்டது. பருவ மழை காலங்களில் ஏரி முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியேறி அமரமேடு வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும். இந்த நிலையில், சில ஆண்டுகளாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரி நீர் செல்லும் கால்வாய் துார்வாரப் படவில்லை. இதனால் ஒவ்வொரு பருவ மழையின் போதும், பிள்ளைப்பாக்கம் ஏரி உபரிநீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையை மூழ்கடித்து வெள்ள பாதிப்பு ஏற்படும். இதனால், அவ்வழியாக போக்குவரத்து தடைப்படும். சாலைகளும் சேதமடையும். தற்போது, செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில், கோரை புற்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. எனவே, எதிர்வரும் பருவ மழையை கருத்தில் கொண்டு, நீர்வளத் துறை அதிகாரிகள் பிள்ளைப்பாக்கம் ஏரியில் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரி நீர் செல்லும் கால்வாயை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதுார் பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிள்ளைப்பாக்கம் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் உபரி நீர் கால்வாய் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் அடுத்த வாரம் துவங்கும்' என்றார்.