மழையால் மலர்கள் விலை சரிவு கிலோ முல்லை ரூ.80; பன்னீர் ரோஜா ரூ.60
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தை மாவட்டத்தை சுற்றியுள்ள வெம்பாக்கம், பூஞ்சேரி, சேந்தமங்கலம், கண்டிகை, மேலச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் முல்லைப்பூ, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.இந்நிலையில், காஞ்சிபுரத்தில், சில நாட்களாக பெய்து வரும் மழையால், காஞ்சிபுரத்தில் பூக்களின் விலை சரிந்துள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம், பூக்கடை சத்திரத்தைச் சேர்ந்த மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கடை உரிமையாளர் பாலாஜி கூறியதாவது:கடந்த வாரம் ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி பூக்களின் விலை இரு மடங்காக உயர்ந்து இருந்தது. தற்போது மழையின் காரணமாகவும், முகூர்த்த நாட்கள் எதுவும் இல்லாததால், பூக்களின் விலை சரிந்துள்ளது.அதன்படி, கடந்த வாரம் கிலோ 500க்கு விற்ற முல்லைப்பூ 80 ரூபாய்க்கும், 800க்கு விற்ற மல்லிகைப்பூ 200க்கும், 240க்கு விற்ற பன்னீர் ரோஜா 60க்கும், 800க்கு விற்ற கனகாம்பரம் 200க்கும், 300க்கு விற்ற சம்பங்கி 60க்கும், 500க்கு விற்ற ஜாதிமல்லி 240க்கும் விற்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.