காஞ்சியில் ஆன்மிக சுற்றுலா 73 பக்தர்களுக்கு இலவச பயணம்
காஞ்சிபுரம்:மூன்றாவது சனிக்கிழமையான நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில், 73 மூத்த குடிமக்களை,ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், வைணவ கோவில்களுக்கு இலவசமாக ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா அழைத்து சென்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், புரட்டாசி மாத முதல் மற்றும் இரண்டாவது சனிக்கிழமைகளில், 140 மூத்த குடிமக்கள் வைணவ கோவில்களுக்கு உணவுடன், இலவசமாக ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார்ர், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 73 மூத்த குடிமக்கள், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்றனர். இதில், காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில், விளக்கொளி பெருமாள் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், பாண்டவ துாதப்பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் என, ஐந்து வைணவ கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட்டனர். சுற்றுலா சென்ற மூத்த குடிமக்களுக்கு தேவையான குடிநீர், பிஸ்கட், மருத்துவ வசதி கொண்ட தொகுப்பை, காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமரதுரை, காஞ்சிபுரம் உதவி ஆணையர் கார்த்திகேயன், வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையர் ராஜலட்சுமி, மாநகராட்சி தி.மு.க., - கவுன்சிலர் கமலக்கண்ணன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரிகள் செந்தில்குமார், ராஜமாணிக்கம், சரக ஆய்வாளர் அலமேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.