உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விநாயகர் சதுர்த்தி விழா விமரிசை

விநாயகர் சதுர்த்தி விழா விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள விநாயகர் கோவில்களிலும், வீடுகளிலும், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மூலவர் சன்னிதி முழுதும் 200, 100, 50, 20, 2, 1 ரூபாய் என, மொத்தம் 15 லட்சம் ரூபாய்க்கு புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் திருக்காலிமேடு சத்யநாதசுவாமி கோவிலில் உள்ள உத்சவர் விநாயகர் வீதி வழியாக உலா வந்தார். காஞ்சிபுரம் மாவட்ட மற்றும் நகர இந்து முன்னணி சார்பில், 35வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி, ஹிந்து எழுச்சி திருவிழா மற்றும் இந்து ஒற்றுமை விழாவாக காஞ்சிபுரம் காந்தி சாலையில் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் திருக்காலிமேடு வீரசிவாஜி தெரு ஆனந்த விநாயகர், சவுராஷ்டிரா தெரு செல்வகணபதி, பாலாஜி நகர் சிந்தாமணி விநாயகர், பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெரு, சித்தி, புத்தி காசி விநாயகர் கோவில்களில், நேற்று காலை மஹா தீபாராதனை நடந்தது. காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை கூழமந்தல் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், நேற்று காலை நட்சத்திர விருட்ச விநாயகருக்கு விசேஷ கலச அபிஷேக ஆராதனை, சஹஸ்ர நாமாவளி அர்ச்சனை, விநாயகருக்கு உகந்த 21 வகையான இலைகள் அர்ச்சனைகளுடன் மகா தீப ஆராதனை நடந்தது. காஞ்சிபுரம் கோனேரிகுப்பம் ஊராட்சி, மூவேந்தர் நகரில் கற்பக விநாயகர் கோவிலில், உத்சவர் விநாயகர் மூஷிக வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

வாழை இலை ரூ.10 க்கு விற்றதால் அதிர்ச்சி

விநாயகர் சதுர்த்தியையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு போன்றவை ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்றது. தக்காளி கிலோ 60 ரூபாய்க்கும், சாத்துக்குடி கிலோ 100, மாதுளை 200 ரூபாய்க்கும், ஆப்பிள் 160 ரூபாய்க்கும் என பல பழங்கள் விலை தாறுமாறாக இருந்தன. குறிப்பாக, படையலுக்கு தேவைப்படும் வாழை இலை ஒன்று 10 ரூபாய்க்கு விற்றது. ஏற்கனவே விலைவாசி உயர்வு பற்றி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதில், பண்டிகை நாளில் விற்கப்படும் காய்கறி, பழங்களின் விலையை கணிசமாக உயர்த்துகின்றனர். இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய சமானியர்களால் பல பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !