பழையசீவரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை கருடசேவை
வாலாஜாபாத்:பழையசீவரம், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஆனி மாத பிரம்மோத்சவ விழாவில், நாளை, கருடசேவை உத்சவம் நடைபெற உள்ளது.வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோத்சவம் விழா நடப்பது வழக்கம்.அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜை, தீபாராதணை நடந்து வந்தது.நேற்று முன்தினம் இரவு, மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி அப்பகுதி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தார்.அதை தொடர்ந்து நாளை மாலை, கருடசேவை உத்சவம் விழா நடைபெற உள்ளது.