உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புவியியல் ரீதியிலான டிஜிட்டல் பதிவுக்கு மாறும்...டெம்பிள் சிட்டி:எதிர்கால திட்டம் கருதி மத்திய அரசு முடிவு

புவியியல் ரீதியிலான டிஜிட்டல் பதிவுக்கு மாறும்...டெம்பிள் சிட்டி:எதிர்கால திட்டம் கருதி மத்திய அரசு முடிவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் மத்திய அரசின் நக் ஷா என்ற திட்டம் மூலம், காஞ்சிபுரத்தின் ஒவ்வொரு பகுதியையும் புவியியல் ரீதியில் சர்வே எண்களை ' டிஜிட்டல் ' மயமாக்க உள்ளனர். இதற்காக, ட்ரோன் கேமரா மூலம் 2டி, 3டி முறைகளில் படம் எடுக்கப்பட உள்ளது.மத்திய அரசின் நில அளவை துறையின் சார்பில், நகர்ப்புறங்களில் உள்ள வீடுகள், காலி மனைகள், கட்டடங்களின் உயரம், அதன் உரிமையாளர், வீட்டுவரி யார் பெயரில் உள்ளது போன்ற அனைத்து விபரங்களையும் ஒருங்கே இணைத்து, புவியியல் ரீதியிலான பதிவுகளை இணையதளத்தில் வெளிப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த புவியியல் ரீதியிலான டிஜிட்டல் பதிவுகள், ஏற்கனவே ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தமிழகத்திலும் இப்பணிகள் துவங்க உள்ளன. குறிப்பாக, நகர்ப்புற எல்லைகள், தெருக்கள், கட்டடம் போன்றவை ஆய்வு செய்து டிஜிட்டல் தரவுகளாக மாற்றப்பட உள்ளன.தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட நகராட்சிகளிலும், கோவை, காரைக்குடி, காஞ்சிபுரம் ஆகிய மாநகராட்சிகளிலும் இந்த, புவியியல் ரீதியிலான டிஜிட்டல் பதிவு பணிகள் துவங்க உள்ளன.இதற்காக, மத்திய அரசு தனியார் ஏஜென்சி மூலம், இந்த டிஜிட்டல் பதிவு பணிகளை மேற்கொள்ள உள்ளது. இப்பணியில், காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் மாநில சர்வே துறை அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். குறிப்பாக, சர்வே துறை சார்பில் சர்வேயர்களும், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் பில் கலெக்டர்களும் இப்பணிக்கு உடன் இருப்பார்கள்.இப்பணி மூலம், நில உரிமையாளர் பற்றிய விபரங்கள் வெளிப்படையாக தெரிவதால், நில மோசடி, வரி ஏய்ப்பு போன்றவை தவிர்க்க முடியும். தரமான நில பதிவேடுகளை உருவாக்கி எதிர்கால திட்டங்களை வகுக்க இந்த திட்டம் வழிவகுக்கும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியின் 36 சதுர கி.மீ., பரப்பளவில் 32,000 ஆயிரம் கட்டடங்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான வீட்டு மனைகளும், விதிமீறல் கட்டடங்களும், வரியே செலுத்தாக காலி மனைகளும், கட்டடங்களும் பல உள்ளன. இந்த புவியியல் ரீதியிலான டிஜிட்டல் பதிவு மூலம் அனைத்து விபரங்களும், தெரிய வரும்.இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் கூறியதாவது :மத்திய அரசின் நில அளவை துறை 'நக் ஷா' என்ற திட்டத்தின் கீழ், நகர்புற எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களையும் புவியியல் ரீதியாக டிஜிட்டலாக பதிவு செய்ய உள்ளனர். காஞ்சிபுரத்தில் உள்ள வீட்டு மனைகள், கட்டடங்களுக்கு வரி விதிப்பது தனி வேலையாகவும், சொத்துக்களுக்கு பட்டா வழங்குவது, உட்பிரிவு செய்வது போன்றவை சர்வே துறையினர் தனி வேலையாகவு செய்து வருகின்றனர். இரு துறைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. மத்திய அரசின் இந்த புவியியல் ரீதியிலான டிஜிட்டல் பதிவு மூலம், ஒவ்வொரு சர்வே எண்ணிலும் உள்ள சொத்துக்கள் காலி மனையாக உள்ளதா, கட்டடமாக உள்ளதா, அவைக்கு வரி விதிக்கப்பட்டதாக, அனுமதி பெறாத கட்டடமா, வரி விதிப்புக்கு மாறாக கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளதா போன்ற அனைத்து தகவலும் கிடைத்து விடும். இதற்காக, 2டி, 3டி முறையில் படம் எடுக்க ட்ரோன் கேமரா பயன்படுத்த உள்ளனர். இதற்கான பணிகள், வரும் 18 ம் தேதி முதல் துவங்கும் என எதிர்பார்க்கிறோம். சர்வே துறையும், மாநகராட்சி பில் கலெக்டர்களும் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி