உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  திருவங்கரணையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு

 திருவங்கரணையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு

வாலாஜாபாத்: திருவங்கரணையில் அரசுக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான புறம்போக்கு நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது திருவங்கரணை கிராமம். இக்கிராமத்தில், கெங்கையம்மன் கோவில் அருகில் அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், குறிப்பிட்ட ஒரு பகுதியை சர்வே எண்;52/4ஐ அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், சில ஆண்டுகளாக ஆக்கிரமித்து தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அந்நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என திருவங்கரணை கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, திருவங்கரணை ஊராட்சி தலைவர் தீபிகா கூறியதாவது: திருவங்கரணையில், ஒரு ஏக்கர் பரப்பிலான அரசு புறம்போக்கு நிலத்தை தனி நபர் ஒருவர், சில ஆண்டுகளாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு பயன்படுத்தி வருகிறார். அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக வருவாய்த் துறையிடம் முறையிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கலெக்டரிடம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடவடிக்கை இல்லாத நிலையில் தற்போது அந்நிலத்தில் விவசாயத்திற்கான உழவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இப்பகுதியில், ஒரு சென்ட் புன்செய் நிலம், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பு கொண்டதாக உள்ளதால் ஒரு கோடி ரூபாய்க்கான அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே, துறை ரீதியான அதிகாரிகள், நேரில் வந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்பில் இருந்து அந்நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை