பாலாற்று பாலம் மூழ்கும் அபாயம் கனரக வாகனங்கள் செல்ல தடை
வாலாஜாபாத்: பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், வாலாஜாபாத் - அவளூர் இடையேயான தரைப்பாலம் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாலாஜாபாதில் இருந்து, பாலாறு தரைப்பாலம் வழியாக அவளூர் கிராமத்திற்கு செல்லும் 1.2 கி.மீ., தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக அங்கம்பாக்கம், அவளூர், தம்மனுார், கம்பராஜபுரம், இளையனார்வேலுார் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்தோர், வாலாஜாபாத் வழியாக தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம், வாலாஜாபாத் -- அவளூர் பாலாற்று தரைப்பாலம் நீரில் மூழ்கி வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அவதிப்படுகின்றனர். பாலாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம், கடந்த 2021ல் ஏற்பட்ட பெருவெள்ளம் காரமணாக உடைந்தது. அவற்றை நெடுஞ்சாலை துறையினர் 2.5 கோடியில் சீரமைத்தனர். இருப்பினும், பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், உயர்மட்ட பாலம் கட்ட, 75 கோடி ரூபாய், நெடுஞ்சாலை துறை ஒதுக்கியுள்ளது. இன்னும் பணிகள் ஏதும் துவங்கவில்லை. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால், பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வாலாஜாபாத் பாலாற்று தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு நேற்று தண்ணீர் சென்றது. சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் உடையும் என்ற அச்சத்தால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வாலாஜாபாத் தரைப்பாலம் மீது நேற்று காலை முதல் போக்குவரத்து தடை செய்து போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதனால், தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் அவதிக்குள்ளாகினர். பின் மாலை, 3:00 மணிக்கு உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்,எல்.ஏ., சுந்தர், வாலாஜாபாத் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் போக்குவரத்து தொடர்வது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தார். அதைத் தொடர்ந்து, பேருந்து, லாரி உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் தவிர்த்து இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ போன்றவை இயக்க நெடுஞ்சாலைத் துறையினர் அனுமதித்தனர். கனரக வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்கள், 30 கி.மீ., துாரம் சுற்றி செல்வதால், அவதிப் படுகின்றனர். மேலும், வாலாஜாபாத் பாலாற்று தரைப்பாலத்தில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, உத்திரமேரூர் எம்.எல்.ஏ., சுந்தர் கூறும்போது, ''உயர்மட்ட பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப்பணி நவம்பர் இறுதியில் துவங்கப்பட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார். வாலாஜாபாத்- - அவளூர் இடையே மேம்பாலம் கட்டுவதற்கு, 75 கோடி ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் நிதி ஒதுக்கீடு செய்தும், பாலப்பணி துவக்காததால், 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது என, கிராம மக்கள், வாகன ஓட்டிகள் புலம்பியபடி சென்றனர்.