திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் மருத்துவமனை கூடுதல் கட்டடம்
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் கட்டி முடிக்கப்பட்ட அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு, உயர் சிகிச்சை மற்றும் விபத்துகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லை. இதனால், விபத்தில் சிக்கியவருக்கு உடனே சிகிச்சை அளிக்க முடியாததால், செங்கல்பட்டு, சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அவ்வாறு நீண்ட துாரமுள்ள மருத்துவமனைக்கு செல்லும்போது, கால தாமதத்தால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக கட்டடம் கட்டி, அனைத்து சிறப்பு சிகிச்சைகளும் அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 2023ல் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்ட, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணியும் துவக்கப்பட்டது. தற்போது கட்டுமான பணி முடிக்கப்பட்டு, கூடுதல் மருத்துவமனை கட்டடம் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் மருத்துவமனை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சுகாதாரத் துறையினர் மெத்தனமாக இருந்து வருகின்றனர். இது குறித்து பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உத்திரமேரூரில் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம், 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது' என்றார். சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மருத்துவமனை கூடுதல் கட்டடத்தை திறக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.