ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், பள்ளிகள், விடுதிகள் போன்றவை இயங்கி வருகின்றன. இதில், மாணவர்கள் தங்கி படிக்கும் ஆதிதிராவிடர் நல விடுதிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17 இடங்களில் இயங்கி வருகின்றன. இதில், சமையலர், வார்டன், துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள், மாவட்டம் முழுதும் 18 பேர் இத்துறையில் பணியாற்றி வரும் நிலையில், போதிய ஊதியம் இல்லாததால், மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.கடந்த 2012ல் வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக, விடுதி துப்புரவு பணியாளர்கள் 18 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். அப்போது, அடிப்படை ஊதியமாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, 2016ல் 3,000 ரூபாயும், 2020ல் 4,100 ரூபாயும் மாத ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இப்பணியாளர்கள் முழு நேர பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.நாள் முழுதும் விடுதியில் நேரம் செலவிடப்படும் நிலையில், அடிப்படை ஊதியமாக 4,100 ரூபாய் குடும்ப தேவைக்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை என, விடுதி துப்புரவு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:நாங்கள் பணியில் சேர்ந்து, 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், எங்கள் ஊதியம், வெறும் 4,100 ரூபாயாகவே உள்ளது. பிற வகையான பணப்பலன்கள் சேர்த்து, 5,296 ரூபாய் மட்டுமே கையில் கிடைக்கிறது. இந்த சம்பளத்தை வைத்து, நாங்கள் எப்படி குடும்பம் நடத்த முடியும். தமிழகம் முழுதும், எங்களை போன்ற 651 பேரின் நிலையும் இதே தான். வீட்டிலிருந்து, விடுதிக்கு சென்று வரவே இந்த சம்பளம் சரியாக போகிறது. குடும்பத்தை எப்படி இந்த சம்பளம் கொண்டு காப்பாற்ற முடியும். கல்வி, மருத்துவம் போன்ற செலவுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. சமையலர்களுக்கு கொடுக்கப்படும் அடிப்படை சம்பளம் அளவுக்கு கூட எங்களுக்கு இல்லை. அரசு ஊழியர் என்பதால், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட எந்தவித அரசு திட்டங்களிலும் பலன் பெற முடியவில்லை.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு 100 நாள் வேலைக்கு கூட அனுமதிப்பதில்லை. நாங்கள் மன உளைச்சலில் இருக்கிறோம். அடிப்படை ஊதியத்தை உயர்த்தி, தமிழக அரசு எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் --