ரூரல் கிரிக்கெட் லீக் தொடர் ஜே.ஜி., சேலஞ்சர் அணி வெற்றி
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் நடந்த, ரூரல் கிரிக்கெட் லீக் தொடரின், இறுதி போட்டியில், ஜே.ஜி., சேலஞ்சர் அணி, பச்சையப்பாஸ் ராக்கர்ஸ் அணியை வீழ்த்தி, கோப்பையை கைப்பற்றியது.இந்திய தொழில் கூட்டமைப்பின் 'யங் இந்தியன்ஸ்' சார்பில் ஐந்து கிரிக்கெட் அணியினர் பங்கேற்ற ரூரல் கிரிக்கெட் லீக் தொடரின் இறுதி போட்டி நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் நடந்தது.இதில், பச்சையப்பாஸ் ராக்கர்ஸ் அணியும், ஜே.ஜி., சேலஞ்சர் அணியும் மோதின. மழை காரணமாக தாமதமாக துவங்கிய இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பச்சையப்பாஸ் ராக்கர்ஸ் அணியினர், 18 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்கள் எடுத்தனர்.இந்த அணியில் ஹரிஷ் 25 ரன்கள் எடுத்தார். ஜே.ஜி., சேலஞ்சர் அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீகிருஷ்ணா 4 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அதை தொடர்ந்து ஆடிய ஜே.ஜி., சேலஞ்சர் அணி 17வது ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து, 90 ரன் என்ற இலக்கை அடைந்து கோப்பையை வென்றனர்.இந்த அணியின் ஜீவானந்தம் 20 ரன்கள் அடித்தார். பச்சையப்பாஸ் ராக்கர்ஸ் அணியில் ரித்தீஷ் 4 ஓவரில், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தொடரின் சிறந்த மட்டை வீச்சாளராக பச்சையப்பாஸ் ராக்கர்ஸ் அணி தலைவர் கீர்த்திவாசன், தொடர் நாயகனாக ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தேர்வாகினார்.இத்தொடர் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மிக சிறந்த வாய்ப்பாக இருந்தது எனவும், இது போல தொடர்கள் நிறைய நடத்தப்பட உள்ளதாக, 'யங் இந்தியன்ஸ்' அமைப்பினர் தெரிவித்தனர்.