/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பரந்துார் ஏர்போர்ட்டிற்குள் சிக்கும் கம்பன் கால்வாய் மாற்று திட்டம்: புதிதாக 8 கி.மீ., நீர்வழித்தடம் அமைக்க அரசு முடிவு
பரந்துார் ஏர்போர்ட்டிற்குள் சிக்கும் கம்பன் கால்வாய் மாற்று திட்டம்: புதிதாக 8 கி.மீ., நீர்வழித்தடம் அமைக்க அரசு முடிவு
காஞ்சிபுரம்: பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதால், முக்கிய நீர் வழித்தடமான கம்பன் கால்வாய், 6 கி.மீ., பாதிக்கும் சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, 8 கி.மீ., மாற்று வழி கால்வாய் அமைத்து தண்ணீர் எடுத்துச் செல்ல, நீர்வளத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில், கம்பன் கால்வாய் என்ற முக்கிய நீர் வழித்தடம் துவங்குகிறது. அங்கிருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக, 44 கி.மீ., கடந்து, ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடைகிறது. 5,320 ஏக்கர் நிலம் இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களில், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் மூலம், 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமையவிருக்கும் பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, 20 கிராமங்களில், 5,320 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. தனியாரிடம் இருக்கும், 3,331 ஏக்கர் நிலங்களுக்கு பத்திரம் பதிவு செய்து, பணம் வழங்கும் பணியை, தமிழக அரசின் தொழில் வளர்ச்சி கழகம் துவக்கியுள்ளது. இந்த பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு கையகப்படுத்தும் நிலங்களின் குறுக்கே, 6 கி.மீ., கம்பன் கால்வாய் கடப்பதால், புதிய விமான நிலையம் அமைந்தால், கம்பன் கால்வாயில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும். மேலும், விமான நிலைய திட்டம் பாதிக்காத வகையில், கம்பன் கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரை, மாற்று வழியில் எடுத்துச் செல்ல, நீர்வள ஆதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.