சுடுகாடு பாதையை சீரமைக்க கம்மாளம்பூண்டி மக்கள் எதிர்பார்ப்பு
உத்திரமேரூர்:சுடுகாடு பாதையை சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கம்மாளம்பூண்டி மக்கள் எதிர்பார்க்கின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், கம்மாளம்பூண்டி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் யாராவது இறந்தால் அங்குள்ள சுடுகாட்டில் புதைத்தும், எரித்தும் வருகின்றனர். தற்போது, சுடுகாட்டிற்கு செல்லும் பாதை சேதமடைந்து, பராமரிப்பு இல்லாமல், செடி வளர்ந்துள்ளன. இதனால், சுடுகாட்டிற்கு இறந்தவர்கள் உடலை எடுத்து செல்லும்போது மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், குறுகலாக உள்ள பாதையை அகலப்படுத்த கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, சுடுகாடு பாதையை சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, கம்மாளம்பூண்டி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.