மேலும் செய்திகள்
ரயில் நிலையத்தில் ஏ.டி.எம்., அமைக்க கோரிக்கை
27-Aug-2024
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என இரு மாவட்டங்களிலும் ரயில்வே துறையில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் கிடப்பில் இருப்பதால், பயணியருக்கு அன்றாடம் சிரமத்தை அளிக்கிறது. ரயில்வே திட்டங்களை விரைந்து மேற்கொள்ள ரயில்வே துறையினரிடம் கேட்டு வருவதாக, காஞ்சிபுரம் எம்.பி., செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.சென்னையை ஒட்டியிருக்கும் தொழில் வளர்ச்சி மிகுந்த மாவட்டங்களில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் வசிக்கும் மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள், முதியோர், பெண்கள் என, ஆயிரக்கணக்கானோர் ரயில் சேவையை நம்பி வெளியூருக்கு பயணம் செய்கின்றனர்.அவ்வாறு ரயில் சேவையை முழுதும் நம்பியுள்ள பயணியருக்கு போதிய ரயில் சேவை கிடைப்பதில் பல்வேறு சிக்கல் நீடிக்கிறது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல ஆண்டுகளாகவே இழுபறியாக உள்ள ரயில் திட்டங்களால், பயணியர் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.1 காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில், ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேலாக டிக்கெட் விற்பனை நடைபெறும் நிலையில், ரயில் நிலையத்தில் பெரும்பகுதி, கூரை வசதியின்றி வெட்ட வெளியாக உள்ளது. மழை, வெயில் நாட்களில் நிற்க கூட பயணியர் சிரமப்படுகின்றனர்2 செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், சென்னை -- -நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில் நிற்காமல் செல்கிறது. அதேபோல, சென்னை- - மதுரை செல்லும் சொகுசு வசதி கொண்ட தேஜஸ் ரயிலும், செங்கல்பட்டில் நிற்காமல் செல்கிறது.இந்த இரு ரயிலிலும் பயணம் செய்ய ஏராளமானோர் விரும்பினாலும், செங்கல்பட்டில் நிற்காமல் செல்வது, சுற்றுவட்டார பயணிருக்கு சிரமத்தை அளிக்கிறது3 சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் பல மின்சார ரயில்களில், சில எண்ணிக்கையிலான ரயில்கள் மேல்மருவத்துார் வரை இயக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பயணியர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மதுராந்தகம், மேல்மருவத்துார் சுற்றியுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற பயணியர், மின்சார ரயில் சேவையை எதிர்பார்க்கின்றனர்.4 வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் மாலை நேரத்தில் அன்றாடம் நீண்ட நேரம் சரக்கு ரயில் நிற்பதால், சேர்க்காடு செல்லும் வழியில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பள்ளி, கல்லுாரி மாணவியர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.5 மேல்மருவத்துாரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக திருப்பதிக்கு, ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையிலான ரயில் சேவையை பலரும் எதிர்பார்க்கின்றனர்.இது தொடர்பாக, காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.பி., செல்வமும், ரயில்வே துறைக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால், இந்த புதிய ரயில் சேவை இன்னும் துவங்காமல் உள்ளது.6 காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில், இந்திரா நகர் செல்லும் வழியில் சுரங்கப்பாதை கட்டாமல் பணிகள் கிடப்பில் உள்ளன. அதேபோல, மின்னணு டிக்கெட் வழங்கும் இயந்திரம் அடிக்கடி பழுதாவதால், அவசர நேரத்தில் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணியர் அவதிப்படுகின்றனர்.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என, இரு மாவட்டங்களிலும், பல ஆண்டுகளாகவே தீராத இப்பிரச்னைகளை, ரயில்வே துறை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் முக்கியத்துவம் கொடுத்து தீர்க்க வேண்டும் என, பயணியர் தரப்பில் எதிர்பார்க்கின்றனர்.காஞ்சிபுரம் எம்.பி., செல்வம் கூறியதாவது:செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கழிவுநீர் பிரச்னை தொடர்பாகவும், பார்க்கிங் பிரச்னை தொடர்பாகவும் ரயில்வே துறை மண்டல மேலாளரை, கடந்த வெள்ளிக்கிழமை அழைத்து வந்தேன். அப்போது, கொளவாய் ஏரிக்கரை அருகே இரு டிக்கெட் கவுன்டர்கள் அமைக்க வலியுறுத்தி உள்ளோம். இந்தாண்டு அமைப்பர் என தெரிகிறது.அதேபோல, தேஜஸ் மற்றும் வந்தே பாரத் ஆகிய இரு ரயில்களும் செங்கல்பட்டில் நிற்க கூறியுள்ளேன். அடுத்து தென்னக ரயில்வேயின் பொது மேலாளரை சந்திக்க உள்ளேன். மேல்மருவத்துார் - திருப்பதி இடையே புதிய ரயில் சேவையை தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஏற்கனவே கடிதமும் கொடுத்துள்ளேன்.அதேபோல, வாலாஜாபாத் ரயில் நிலையத்திலிருந்து சேர்க்காடு செல்லும் வழியில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, சுரங்கப்பாதை அமைக்கப்படும்.செங்கல்பட்டு மாவட்டம் படாளம் ரயில் நிலையத்தில் சில ரயில்கள் நிற்பதில்லை. அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன். அதேபோல, செங்கல்பட்டு - -காஞ்சிபுரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க தொடர்ந்து கேட்டு வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
27-Aug-2024