திருப்பனந்தாள் மடத்தின் அதிபரின் சமய பணி நினைவு கூர்ந்தார் காஞ்சி விஜயேந்திரர்
காஞ்சிபுரம்:பரிபூர்ணம் அடைந்த தஞ்சாவூர் திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்தின் 21வது அதிபரின், சமய மற்றும் கல்வி பணிகளை, காஞ்சி மடாபதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவு கூர்ந்தார் என, காஞ்சிபுரம் சங்கரமடம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரரேச ஐயர் வெளியிட்ட செய்தி குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் காசி மடத்தின், 21வது அதிபராக இருந்த கயிலை மாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் அவர்கள் பரிபூர்ணம் அடைந்தார். இதுகுறித்த கேட்டறிந்த காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அன்னாரது சமய தொண்டுகளையும் கல்வி பணிகளையும் நினைவு கூர்ந்தார். காஞ்சி காமகோடி பீடத்திற்கும் திருப்பனந்தாள் காசி மடத்திற்கும் இன்றளவும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும், மறைந்த காசி அதிபரின் 90 வது ஜெயந்தி விழாவில் ஸ்ரீ பெரியவர்கள் பங்கேற்று கொண்டதையும், காஞ்சி மடத்து சங்கராச்சாரியார்கள் செய்த வியாச பூஜைக்கு கங்கை நீரை காசி மடத்து அதிபர் அனுப்பி வைக்கும் வழக்கம் இருந்ததையும் நினைவு கூர்ந்தார். மேலும் மறைந்த காசி அதிபர் காஞ்சி காமாக்ஷி அம்மனின் பக்தராக விளங்கியவர். வட நாட்டையும், தென்நாட்டையும் இணைக்கும் கலாசார பாலமாக விளங்கி சிறந்த கல்விப்பணி ஆற்றியவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.