வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Excellent. Congratulations to all.
சபாஷ். வாழ்த்துக்கள்.
காஞ்சிபுரம்:மாவட்ட அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள், சிகிச்சை அளிக்கும் முறைகள், நோயாளிகள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து, சுகாதாரத் துறை அளிக்கும் தர வரிசை பட்டியலில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 10 மாதங்களாகவே முதல் இடத்தில் தொடர்கிறது.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், தமிழக அளவில் செயல்படும் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் பற்றி தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவனைகளில் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள், நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவ வசதிகள் என, பல வகையில் ஆராயப்பட்டு தரவரிசை பட்டியல் வழங்கப்படுகிறது.கிராமப்புறங்களில் செயல்படும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, பல வகைகளில் இந்த தர வரிசை பட்டியல் மாதந்தோறும் தயாரிக்கப்படுகிறது.அந்த வகையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வில், தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஒராண்டாகவே முதல் இடத்தில் தொடர்கிறது.காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில் செயல்படும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஆங்கிலேயேர் ஆட்சியின்போது துவங்கப்பட்டு, தற்போது வரை செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் நகர மக்களுக்கு மட்டுமல்லாமல், சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிப்போருக்கும் இந்த அரசு மருத்துவமனை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.அவசர சிகிச்சை, பிரசவம், டயாலிசிஸ், அறுவை சிகிச்சை என, முக்கிய உயிர் காக்கும் சிகிச்சைகளும் இங்கு வழங்கப்படுவதால், அருகில் உள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமாலை மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் வசிப்போரும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அன்றாடம் சிகிச்சைக்காக வருகின்றனர்.இம்மருத்துவமனையின் சேவைகள் பற்றி, நோயாளிகள் மற்றும் உடன் வருவோர் பல்வேறு புகார்களை தெரிவிக்கின்றனர். இருப்பினும், சிகிச்சை முறைகளிலும், நோய்களை குணப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்வது, ஆய்வக செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து வகையான செயல்பாடுகளை கணக்கிட்டு, 143.7 புள்ளிகள் வழங்கி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குனரகம், இம்மருத்துவமனைக்கு முதலிடம் வழங்கியுள்ளது.ஒரு நாளைக்கு, 3,500- - 4,000 பேர், புறநோயாளிகளாகவே இங்கு வந்து செல்கின்றனர். இதுமட்டுமல்லாமல், உள் நோயாளிகள், பிரசவம், குடும்ப கட்டுப்பாடு, அறுவை சிகிச்சை, ஸ்கேன், இதய பிரிவு, டயாலிசிஸ், மனநலம் என, 23 வகையான சிகிச்சை முறைகள் இங்கு வழங்கப்படுகின்றன.மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளில் சேர்த்து மொத்தம், 765 படுக்கைகள் உள்ளன. இங்கு, 70 மருத்துவர்களும், 107 செவிலியர்களும், 200 பிற வகையான ஊழியர்களும் பணியாற்றுகன்றனர்.மருத்துவமனையில், 92.6 சதவீத படுக்கைகள் எப்போதுமே நிரம்பி காணப்படுகிறது. மருத்துவமனையின் தரமான மருத்துவமனை சேவைக்கு சான்றிதழும், மகப்பேறு சார்ந்த சேவைகளுக்கு சான்றிதழும், பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சைகளுக்கு சான்றிதழ் என, மூன்று வகையான பாராட்டு சான்றிதழ்களை, மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளன.தமிழக அளவில் முதலிடம் பிடித்தாலும், இதய பிரிவுக்கான ஆஞ்சியோ பரிசோதனைக்கு தொழில்நுட்பவியலாளர் இல்லாதது, வாகன நிறுத்துமிடம் இல்லாதது, பிரசவத்துக்கு பிறகு தாய், சேய் ஆகியோரை வீட்டுக்கு அனுப்ப கூடுதல் வாகனம் இல்லாதது ஆகிய தேவைகளை சரி செய்ய வேண்டிய கட்டாயம் இம்மருத்துவமனைக்கு உள்ளது.இதுபற்றி, மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சுகாதாரத் துறை சார்பில் மாதந்தோறும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு தர வரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களாகவே காஞ்சிபுரம் மருத்துவமனை தான், மருத்துவ சேவையில் முதல் இடத்தில் உள்ளது. இங்குள்ள 23 வகையான சிகிச்சைகளையும் கணக்கிட்டு தான் இந்த தரவரிசை வழங்கப்படுகிறது.தற்போதைய சூழலில், மருத்துமனைக்கு சில கூடுதல் கட்டட வசதி தேவைப்படுகிறது. கட்டட வசதியையும் கூடுதலாக மேம்படுத்தினால், இன்னும் சிறப்பான சேவை வழங்க முடியும். மருத்துவமனையில் குவிந்திருந்த குப்பை அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன.இவ்வாறு அவர் கூறினார்.
சிகிச்சை வகைகள் நோயாளிகள் எண்ணிக்கைபுறநோயாளிகள் 86,000உள் நோயாளிகள் 6800பிரசவம் 600சிசேரியன் 217இரவு நேர சிசேரியன் 101குடும்ப கட்டுப்பாடு 244பொது அறுவை சிகிச்சைகள் 41மனநல சிகிச்சை 2,818டயாலிசிஸ் 799'ஸ்கேன் 1,452எக்ஸ்ரே 5,173அவசர சிகிச்சை 1,065
Excellent. Congratulations to all.
சபாஷ். வாழ்த்துக்கள்.