ஏரிக்கரையில் மண் அரிப்பு அச்சத்தில் கொளத்துார் மக்கள்
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, கொளத்துார் ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையில் தொடர்ச்சியாக மண் அரிப்பு ஏற்பட்டு, கரை சரிந்து உள்ளதால், கரை உடையும் அபாயத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 200 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, கொளத்துார், மேட்டுக்கொளத்துார் ஆகிய கிராமங்களில், 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது, தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சில நாட்களாக ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதே போல, கொளத்துார் ஊராட்சியில் உள்ள ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில், ஏரியின் மதகு அருகே, ஏரிக்கரையின் உட்புறமாக பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மண் அரிப்பு ஏற்பட்டு, கரை சரிந்து உள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில், கரை மேலும் சரிந்து ஏரிக்கரை உடைப்பு ஏற்படும் அச்சத்தில் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் உள்ளனர். இதனால், விவசாய நிலங்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மண் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி, கரையை பலப்படுத்தி சீரமைக்க, பொதுப்பணித் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.