காஞ்சிபுரம்:பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களுக்குக்கூட நிதியில்லாமல், காஞ்சிபுரம் மாநகராட்சி தவித்து வருகிறது. அரசின் நிதி உதவிக்காக காத்திருப்பதாகவும், விரைவில் நிதி கிடைக்கும் எனவும், மேயர் மகாலட்சுமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் நான்கு மண்டலங்களின் கீழ் உள்ள 51 வார்டுகளிலும், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அடுத்த 15 ஆண்டுகளில், மக்கள் தொகை எண்ணிக்கை நான்கு லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை பேர் வசிக்கும் நகருக்கான எதிர்கால திட்டங்கள் போதுமான அளவில் இல்லை என்றே நகர மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், நிதி நிலைமைக்கு ஏற்ப, அறிவிக்கப்படும் திட்டங்களை செயல்படுத்தவே நிதியில்லாததால், அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த முடியாமல், மாநகராட்சி நிர்வாகம் தவிக்கிறது. அதாவது, காஞ்சிபுரம் மாநகராட்சியின், 2025- - 26ம் ஆண்டுக்கான, பட்ஜெட் தாக்கல், மார்ச் மாதம் நடந்தது. இதில், நடப்பாண்டு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் பற்றி மேயர் மகாலட்சுமி, 54 அறிவிப் புகளை வெளியிட்டிருந்தார். இதில், முக்கியமான திட்டங்களை மேற்கொள்ள நிதியில்லாத நிலையில், பல்வேறு திட்டங்கள் அறிவிப்போடு முடங்கியுள்ளது. குறிப்பாக, நகரில் சாலை சீரமைப்பு, நகர்ப்புற அரசு மருத்துவமனைகள் கட்டுவது, வணிக வளாகம் கட்டுவது, பூங்காக்கள் சீரமைப்பு போன்ற பணிகளாவது துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான பணிகள் துவங்காதது, மக்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. நாய்களுக்கான கருத்தடை மையம் கட்டுதல், பாதாள சாக்கடை திட்டத்தால் சேதமான சாலைகளை சீரமைத்தல் போன்ற சில பணிகள் மட்டுமே துவங்கியுள்ளன. பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை, இந்தாண்டு மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றுமா என்ற சந்தேகம் கவுன்சிலர்களிடமும் எழுந்துள்ளது. மாநகராட்சியில் நிதியில்லாததால், அரசின் நிதி உதவியை எதிர்பார்த்து, மாநகராட்சி நிர்வாகம் காத்திருக்கிறது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர், மகாலட்சுமி கூறியதாவது: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள், அதற்கு தேவையான நிதி குறித்து, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். திட்ட அறிக்கைகளையும் அனுப்பி உள்ளோம். நிதி ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர். நிதியை எதிர்பார்த்துள்ளோம். தேர்தலுக்கு முன் நிதி கிடைத்து பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார் நிதியுதவி கேட்டு அரசுக்கு கடிதம் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள், அதற்கு தேவையான நிதி குறித்து, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். திட்ட அறிக்கைகளையும் அனுப்பி உள்ளோம். நிதி ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர். நிதியை எதிர்பார்த்துள்ளோம். தேர்தலுக்கு முன் நிதி கிடைத்து பணிகள் துவங்கும். - மூ.மகாலட்சுமி, மேயர், காஞ்சிபுரம் மாநகராட்சி. முடங்கியுள்ள திட்டங்கள் நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, நிதியின்றி முடங்கிஉள்ள முக்கிய திட்டங்கள்: புதிதாக 19 நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் அமைத்தல் ஐந்து பூங்காக்கள் 3.19 கோடி ரூபாயில் சீரமைத்தல். அண்ணாத்துரை நுாற்றாண்டு நினைவு பூங்காவில், மகளிர் உடற்பயிற்சி மையம் அமைப்பதோடு, ஒரு கோடி ரூபாயில் சீரமைத்தல் மாநகராட்சியில், 25, 26, 28 ஆகிய வார்டுகளில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கூடுதலாக 800 எல்.இ.டி.,விளக்குகள், 2 கோடி ரூபாயில் அமைத்தல் வார்டு கவுன்சிலர் மேம்பாட்டு நிதி 10 லட்சம் ரூபாயாக மேம்படுத்துதல் மட்கும், மட்காத குப்பைகளை 100 சதவீதம், அறிவியல் பூர்வமாக அகற்றி முழுமை காண, முன்மாதிரி வார்டுகளாக 10 வார்டுகள் தேர்வு செய்து நடவடிக்கை எடுத்தல் அண்ணாத்துரை அரங்கத்தை இடித்துவிட்டு, தனியார் பங்களிப்புடன் ஆறு கோடி ரூபாயில், புதிய அண்ணாத்துரை அரங்கம், வணிக வளாகம், பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவை அமைத்தல் மஞ்சள் நீர் கால்வாயை 40 கோடி ரூபாயில் மேம்படுத்துதல்; கால்வாயையொட்டி, 15 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை வழித்தடம் அமைத்தல் போன்ற அறி விப்புகள் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன.