கைலாசநாதர் கோவிலை சுற்றி உள்ளூர் வாகனங்கள் ஆக்கிரமிப்பு பார்க்கிங் வசதியின்றி சுற்றுலா பயணியர் அவதி
காஞ்சிபுரம்:வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வந்து செல்லும், கைலாசநாதர் கோவில் அருகே பார்க்கிங் வசதி இல்லாமல், உள்ளூர் வாகனங்கள் ஆக்கிரமிப்பால், சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடமில்லாத நிலை நிலவுகிறது. காஞ்சிபுரம் நகரில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், கைலாசநாதர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், பிறவாதீஸ்வரர் கோவில் உட்பட ஏழு கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில், கைலாசநாதர் கோவிலுக்கு அன்றாடம் ஏராளமான வெளியூர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர் வந்து செல்கின்றனர். கி.பி.,7ம் நுாற்றாண்டில், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவில் சிறப்பு பற்றி தெரிந்து கொள்ள ஏராளமானோர் ஆர்வத்தோடு வருகின்றனர். பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் வரும் சுற்றுலா பயணியர், அவர்களது வாகனங்களை நிறுத்த, கைலாசநாதர் கோவில் வளாகத்தில் சரியான பார்க்கிங் வசதி இல்லாதது, பெரும் குறையாக உள்ளது. கோவில் வெளியே உள்ள சாலை ஓரங்களையும், அப்பகுதி மக்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர். இதனால், சுற்றுலா பயணியர் வாகனங்களை நிறுத்த முடியாமல் போகிறது. தொல்லியல் துறை அதிகாரிகளும், கோவிலுக்கு தேவையான வசதிகள் பற்றி, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை எடுத்து கூறியும், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல், சுற்றுலா பயணியர் சிரமப்படுவது தொடர் கதையாகி வருகிறது. காஞ்சிபுரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணியரின் முதல் பார்வை இடமாக, கைலாசநாதர் கோவில் உள்ள நிலையில், கோவிலுக்கு தேவையான வசதிகளை, மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர்.