நீர்வரத்து கால்வாய் இல்லாத மருதம் பொது குளம்
உத்திரமேரூர்: மருதத்தில், பொது குளத்தை துார்வாரி நீர்வரத்து கால்வாய் வசதி ஏற்படுத்த, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் தாலுகா, மருதம் கிராமத்தில் உள்ள பொது குளம் அப்பகுதியின் பிரதான நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. இக்குளத்து தண்ணீர் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பொது குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. நீர்பிடிப்பு பகுதி மண்ணால் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், மழை நேரங்களில் குறைவான அளவே தண்ணீர் சேகரமாகி வருகிறது. மேலும், பொதுகுளத்திற்கு நீர்வரத்து கால்வாய் வசதி இல்லாததால், ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, மருதம் பொது குளத்தை துார்வாரி, நீர்வரத்து கால்வாய் வசதி ஏற்படுத்த, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.