காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், முதன் முறையாக பழைய சிமென்ட் சாலையை, 'மில்லிங்' செய்து அகற்றிவிட்டு, புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. பிற வார்டுகளிலும் இதே நடைமுறையை பின்பற்ற விருப்பம் ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாநகராட்சியில், 4 மண்டலங்களின் கீழ், 51 வார்டுகளில், 1,008 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில், பெரும்பாலான சாலைகள் மோசமான நிலையில், பயணிக்க லாயக்கற்ற நிலையில் உள்ளன.சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலை அமைக்கவும் நகரவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவ்வாறு, பொது நிதி, உட்கட்டமைப்பு நிதி, மாநில நிதிக்குழு மானிய நிதி என, பல வகையான நிதி ஆதாரம் மூலம், நகரின் பல இடங்களில் சாலை அமைக்கும் பணிகள், சில மாதங்களாகவே நடக்கின்றன.அவ்வாறு, புதிதாக அமைக்கப்படும் கான்கிரீட் சாலை, தார் சாலை என, இரு வகையான சாலைகளும், பழைய சாலையை அகற்றாமலேயே போடப்பட்டு வந்தன.பழைய சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். அவரது உத்தரவையும் மதிக்காமல் ஒப்பந்ததாரர்கள் புதிய சாலை அமைத்து வந்தனர். அதிகாரிகள் இவற்றை கண்டுகொள்ளாமலேயே இருந்தனர்.பழைய சாலையை அகற்றுவது பற்றி கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் என யாரிடம் கேள்வி எழுப்பினாலும், முறையான பதில் அளிப்பதில்லை. பழைய சாலை அகற்றாமல், புதிய சாலை அமைப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தனர்.இதனால், சாலையின் உயரம் பல மடங்கு அதிகரிப்பதால், வீடுகள் பள்ளமாவதோடு, மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்படுகிறது. சாலை உயரமாகவும், வீடு பள்ளமாகவும் இருப்பதால், பலர் விபத்தில் சிக்குகின்றனர். பாதாள சாக்கடை கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.இந்நிலையில், 32வது வார்டுக்குட்பட்ட, கோட்ராம்பாளையம் தெருவில், சிமென்ட் சாலை அமைக்க, 25 லட்சம் ரூபாய் மாநகராட்சி ஒதுக்கீடு செய்திருந்தது. ஒப்பந்ததாரர் மூலம், கடந்த மாதம் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்தது. பழைய சிமென்ட் சாலையை அகற்றாமல், புதிய சாலை அமைக்கப்பட்டது.இதனால், அப்பகுதிவாசிகள் மட்டுமல்லாமல், கவுன்சிலர் சாந்தி உட்பட பலரும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பழைய சாலையை அகற்ற வலியுறுத்தினர்.கோட்ராம்பாளையம் தெருவில் உள்ள விநாயகர் கோவில் வரை, 'மில்லிங்' எனப்படும் பழைய சாலையை அகற்றாமலேயே போடப்பட்டது. மீதமுள்ள பாதி சாலையை 'மில்லிங்' செய்த பிறகே அமைக்க வேண்டும் என, கவுன்சிலர், வார்டு மக்கள் என பல தரப்பினரும் மாநகராட்சி கமிஷனர் உட்பட பலருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளனர்.இதனால், மாநகராட்சியிலேயே முதன்முறையாக, பழைய சிமென்ட் சாலையை அகற்றிவிட்டு, புதிய சிமென்ட் சாலையை அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.இதன் மூலம், கோட்ராம்பாளையம் தெருவின் சாலை உயரம் அதிகரிக்காது என்பதால், அப்பகுதியினர் நிம்மதியடைந்துள்ளனர்.மாநகராட்சியில், விளக்கடி கோவில் தெரு, புதுப்பாளையம் தெரு, அப்பாராவ் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில், 'மில்லிங்' செய்யாமலேயே புதிய சாலை அமைக்கப்பட்டன. அங்கேயும், 'மில்லிங்' செய்து புதிய சாலை அமைத்திருந்தால், சாலையின் உயரம் அதிகரித்திருக்காது என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.மாநகராட்சியின் மற்ற வார்டுகளில் உள்ள தெருக்களில் புதிய சாலை அமைக்கும்போது, கோட்ராம்பாளையம் தெருவை பின்பற்றி, 'மில்லிங்' செய்து புதிய சாலை அமைக்க, வார்டு கவுன்சிலர்கள் வலியுறுத்த வேண்டும் என, நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.சாலை பணிகள் மேற்கொள்ளும்போது, எந்த நிதியில் மேற்கொள்கிறோம் என்பது முக்கியமானது. சாலை பணிக்கான மதிப்பீடு தயாரிக்கும்போது, 'மில்லிங்' செய்வதற்கான நிதியும் சேர்க்கப்படும். சிலவற்றுக்கு அந்த மதிப்பீடு சேர்க்காமல் விடப்படுகிறது. 'மில்லிங்' செய்ய தேவையான மதிப்பீடு சேர்க்கப்பட்டிருந்தால், புதிய சாலை அமைக்கப்படும்போது கட்டாயம் மில்லிங் செய்யப்படும். - மகாலட்சுமி,மேயர், காஞ்சிபுரம் மாநகராட்சி.
மாநகராட்சி நடவடிக்கை
கோட்ராம்பாளையம் தெருவில், 'மில்லிங்' செய்யாமல் புதிய சிமென்ட் சாலை அமைப்பது குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி, நம் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதை் தொடர்ந்து, பழைய சிமென்ட் சாலையை 'மில்லிங்' செய்து, புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.