உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை இன்று விரிவாக்கம்! காஞ்சி, செங்கல்பட்டுக்கு 7 வாகனங்கள் வழங்கல்

நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை இன்று விரிவாக்கம்! காஞ்சி, செங்கல்பட்டுக்கு 7 வாகனங்கள் வழங்கல்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, ஏழு கால்நடை மருத்துவ ஊர்தி சேவை வாகனங்கள் இன்று வழங்கி, மருத்துவ சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக, அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வர முடியாத கால்நடைகள் பயன்பெறும் என, அத்துறையினர் தெரிவித்தனர்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 106 கால்நடை மருந்தகங்கள், 38 கிளை நிலையங்கள், மூன்று தலைமை மருத்துவமனை, ஒரு நடமாடும் கால்நடை மருந்தகம் என, 148 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன.இதில், 20வது கால்நடைகள் கணக்கெடுப்பின் படி, 19,652 எருமை மாடுகள், 1.68 லட்சம் கறவை மாடுகள், பன்றிகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள், நாய்கள், கோழிகள் என, மொத்தம், 4.10 லட்சம் கால்நடைகள் உள்ளன.

குடற்புழு நீக்கம்

இம்மருத்துவமனைகளில், குடற்புழு நீக்கம், வெறிநாய் கடி, இனப்பெருக்கம், காய்ச்சல் ஆகிய பல்வேறு விதமான நோய்களில் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது தவிர, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடை பராமரிப்போர், 1962 என்கிற கட்டணமில்லாத சேவை அழைப்பு வாயிலாக, கால்நடை மருத்துவ வசதி பெற்று வந்தனர்.இந்த வாகனத்தில் சென்று, ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க எளிதாக இருப்பதால், கூடுதலாக வாகனங்கள் வழங்க வேண்டும் என, துறை ரீதியாக பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.இதை ஏற்ற கால்நடை துறை நிர்வாகம், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மூன்று வாகனங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நான்கு வாகனங்கள் என, மொத்தம் ஏழு வாகனங்கள் வழங்க தீர்மானித்து உள்ளது.இதன் துவக்க விழா, இன்று காலை, காஞ்சிபுரம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்களுக்கு, ஒரு வாகனம். குன்றத்துார், ஸ்ரீபெரும்புதார் ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு வாகனம். உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு ஒரு வாகனம் என, மூன்று வாகனங்கள் வழங்கப்பட உள்ளன.அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், அச்சிறுபாக்கம் ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்களுக்கு, ஒரு வாகனம். காட்டாங்கொளத்துார், திருப்போரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு, ஒரு வாகனம். திருக்கழுக்குன்றம், சித்தாமூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா ஒன்று என, மொத்தம் நான்கு வாகனங்கள் வழங்கப்பட உள்ளன.

எளிதில் சிகிச்சை

இந்த வாகனங்களில், ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு உதவியாளர், ஒரு ஓட்டுனர் என, மூவர் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வாயிலாக பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.இந்த நடமாடும் மருத்துவ சேவை, காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையில், தினசரி இரு கிராமங்களை தேர்வு செய்து, நடமாடும் கால்நடை மருத்துவக் குழுவினர் ஆடு, மாடுகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.உதாரணமாக, கால்நடைகளுக்கு நோய் கண்டறிதல், அதற்கு ஏற்ப சிகிச்சை அளித்தல், தடுப்பூசிகள் போடுதல், சினை பரிசோதனை செய்தல், செயற்கை கருவூட்டல் மற்றும் அறுவை சிகிச்சை, அவசர சேவைகள் வழங்கப்பட உள்ளன.இந்த, 1962 கட்டணமில்லாத சேவைக்கு அழைத்தால், வீடு தேடி ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக, நடக்க முடியாத ஆடு, மாடுகளுக்கு எளிதில் சிகிச்சை கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கால்நடைத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில், சிகிச்சைக்கு அழைத்து வர முடியாத ஆடு, மாடுகளை, அதன் பராமரிப்பாளர்கள், 1962 என்கிற கட்டணமில்லாத சேவைக்கு அழைத்தால் போதும். வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இதை, கால்நடை வளர்ப்போர், பெரிய வாய்ப்பாக நினைத்து, கட்டணமில்லாத சேவை வசதியை பெறலாம். மேலும், குறித்த நேரத்திற்குள் சிகிச்சை பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ