தடுப்பு இல்லாத சிறுபாலத்தால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார்:மேட்டுப்பாளையம் அருகே, வல்லக்கோட்டை சாலை சந்திப்பில், சாலையோரம் உள்ள சிறுபாலத்திற்கு தடுப்பு இல்லாததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரகடம் அடுத்த, பண்ருட்டியில் இருந்து, மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குண்ணம், மேட்டுப்பாளையம், வல்லம் கண்டிகை உள்ளிட்ட கிராம மக்கள் இந்த சாலை வழியே, ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதேபோல், வல்லக்கோட்டையில் உள்ள மகளிர் தங்கும் விடுதிக்கு செல்லும் தனியார் பேருந்து, வல்லம் - வடகால் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு செல்லும் பேருந்துகள் ஏராளாமாக சென்று வருகின்றன.இந்த சாலையில், மேட்டுப்பாளையம் அருகே, வல்லக்கோட்டை செல்லும் சாலை சந்திப்பில் உள்ள சிறுபாலம் தடுப்பு இல்லாமல் உள்ளது. தொழிற்சாலை பேருந்துகள், லாரி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில், தடுப்பு இல்லாத சிறுபாலத்தின் ஓரம் செல்லும் போது, விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது, சாலையோர பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், விபத்திற்கு வழிவகுக்கும் வகையில் உள்ள சிறுபாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.