சேதமடைந்த வேகவதி ஆற்று பாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வேகவதி ஆற்று பாலம் பல இடங்களில் சேதமடைந்து, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சின்ன காஞ்சிபுரம் சித்தி விநாயகர் பூந்தோட்டம் - தும்பவனம் பகுதிக்கு இடையே செல்லும் வேகவதி ஆற்றின் குறுக்கே சிறுபாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக ஓரிக்கை, டெம்பிள்சிட்டி, வேளிங்கபட்டரை உள்ளிட்ட பகுதி மக்கள் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு, சிறுபாலத்தின் வழியாக கனரக வாகனம் சென்றதால் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. தற்போது சேதமான பகுதியில், செடிகள் வளர்ந்து உள்ளன. தெரு மின்விளக்கு வசதி இல்லாததால் இவ்வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாலம் சேதமடைந்தது தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, பாலம் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணி களை காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.