உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குத்தம்பாக்கத்தில் இருந்து150 பஸ்கள் வழித்தட பட்டியல் தயாரித்தது எம்.டி.சி.,

குத்தம்பாக்கத்தில் இருந்து150 பஸ்கள் வழித்தட பட்டியல் தயாரித்தது எம்.டி.சி.,

சென்னை, சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருமழிசையை அடுத்த குத்தம்பாக்கத்தில், 400 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீத பணிகள் முடிந்துள்ளதால், வரும் மார்ச் மாதத்தில், பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கிறது.இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் ஏற்படும் நெரிசலை குறைக்க, பல்வேறு இடங்களில் பஸ்களை பிரித்து இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கத்தை தொடர்ந்து, குத்தம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கிருந்து வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பயணியர் தேவைக்கு ஏற்ப, வெளியூர் பஸ்கள் இயக்கப்படும்.இங்கிருந்து சென்னையின் மற்ற இடங்களை இணைக்கும் வகையில், 150 மாநகர பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.இதற்காக வழித்தட பட்டியலை தயாரித்துள்ளோம். குறிப்பாக, கிளாம்பாக்கம், தி.நகர், பிராட்வே, தாம்பரம், கூடுவாஞ்சேரி, திருவான்மியூர், கோயம்பேடு, மாதவரம், கடற்கரை உள்ளிட்ட வழித்தட பஸ்கள் இடம் பெறும். பூந்தமல்லியில் இருந்து தற்போது இயக்கப்படும் பஸ்களில், 70 சதவீதம்; போரூரில் இருந்து இயக்கப்படுவதில், சில பஸ்களும், குத்தம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.இதுதவிர, பைபாஸ் சாலை வழியாக கிளாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சில புதிய வழித்தடங்களிலும், மாநகர பஸ்கள் இயக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆன்லைனில் மாநகர பஸ் டிக்கெட் பெறும் வசதி

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும், 3,300க்கும் மேற்பட்ட பஸ்களில், 31.80 லட்சம் பேர் தினமும் பயணிக்கின்றனர். பயண துாரம் குறைவு என்பதால், பஸ்களில் கட்டணம் குறைவாக உள்ளது. இருப்பினும், பயணியர் சிலர், 50, 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்து டிக்கெட் வாங்கும்போது, நடத்துநரிடம் வாய்த்தகராறு ஏற்படுகிறது. மெட்ரோ மற்றும் மாநகர பஸ்களில் ஒரே அட்டையில் பயணிக்க வசதியாக, 'சிங்கார சென்னை அட்டை' கடந்த 6ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்தகட்டமாக ஆன்லைனில் டிக்கெட் பெறும் வசதியை துவங்க உள்ளது.இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: பயணியரிடம் இணையதள வசதி கொண்ட மொபைல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, மாநகர பஸ் டிக்கெட்டுகளை, 'ஆன்லைனில்' பெறும் வசதியை கொண்டு வர உள்ளோம். இதற்கான பிரத்யேக செயலி சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும். இந்த செயலி வாயிலாக, பயணியர் வீட்டில் இருந்தே பயணம் செய்ய உள்ள வழித்தடத்தை தேர்வு செய்து, டிக்கெட் பெற்று பயணிக்கலாம். பயண துாரத்தை பொருத்து, இந்த டிக்கெட் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் செல்லும். மாநகர பஸ்சில் செல்லும்போது, நடத்துநரிடம் இந்த ஆன்லைன் டிக்கெட் காண்பித்தாலே போதும். இந்த புதிய திட்டத்தால், சில்லரை பிரச்சினை இன்றி, நிம்மதியாக பயணிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி