உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிய தங்க தேர்: விரைவில் வெள்ளோட்டம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிய தங்க தேர்: விரைவில் வெள்ளோட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, 23 கிலோ தங்கத்தில், 23 அடி உயரத்தில் புதிய தங்கத் தேர் செய்யும் பணி நிறைவு பெறும் நிலையில் இருப்பதால், விரைவில் வெள்ளோட்டம் நடத்தப்படும் என, ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 29 கோடி ரூபாயில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. வரும் டிச., 8ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இக்கோவிலுக்கு புதிதாக தங்கத் தேர் செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, தங்கத் தேர் செய்யும் பணி 12 ஆண்டுகளுக்கு முன் துவங்கி, பாதியில் நிறுத்தப்பட்டது. இதையறிந்த காஞ்சி மடாதிபதி விஜயேந்திரரின் முயற்சியால், ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, தங்கத் தேர் செய்யும் பணி மீண்டும் துவங்கி, இரு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், மரம் மற்றும் தங்க வேலைப்பாடு செய்யும் 40க்கும் மேற்பட்ட சிற்பிகள் மூலம் தங்கத் தேர் செய்யப்பட்டு, பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. தங்கத் தேர் 23 அடி உயரம், 15 அடி நீளம், 13 அடி அகலம் கொண்டதாக அமைகிறது. 23 கிலோ தங்கம் பயன்படுத்தப் படுகிறது. தேரில் தங்கத்தகடுகள் பொருத்தும் பணி, ஓரிக்கையில் உள்ள மஹா சுவாமிகள் மணி மண்டபத்தில் நடந்து வருகிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமரதுரை, ஓரிக்கை மணி மண்டப நிர்வாக அறங்காவலர் மணி அய்யர் மற்றும் ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோரின் ஒத்துழைப்போடும் தங்கத் தேர் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய தங்கத் தேரை ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்துவதற்காக, 18 லட்சம் ரூபாயில் மண்டபம் ஒன்றும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. தேருக்கு தங்கத் தகடு பொருத்தும் பணி முழுமை பெற்று, விரைவில் வெள்ளோட்டம் நடைபெறும் என, ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை