உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில் எதிரே கடைகள் கட்ட வல்லக்கோட்டையில் எதிர்ப்பு

கோவில் எதிரே கடைகள் கட்ட வல்லக்கோட்டையில் எதிர்ப்பு

ஸ்ரீபெரும்புதுார்:வல்லக்கோட்டை முருகன் கோவில் எதிரே, பக்தர்கள் சென்று வருவதற்கு இடையூறு ஏற்படும் வகையில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கடைகளை கட்டுவதற்கு, அப்பகுதியில் வசிப்போர் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவிலில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருக பெருமான் அருள்பாளிக்கிறார். கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில், காஞ்சிபுரம் மட்டுமின்றி, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருக பெருமானை தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில், வல்லக்கோட்டை முருகன் கோவில் எதிரே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, அப்பகுதியினர் பல ஆண்டுகளாக பூக்கடைகளை நடத்தி வந்ததனர். இந்த நிலையில், இம்மாதம் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்திற்காக, கோவில் எதிரே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட பூக்கடைகள், போலீசார் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன. இதையடுத்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள், எந்தவித இடையூறும் இன்றி சென்று வந்தனர். இந்த நிலையில், வல்லக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்தினர், அப்பகுதியில் மீண்டும் புதிதாக கடைகளை கட்டி, வாடகைக்கு விடும் நோக்கில், கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு, அப்பகுதியில் வசிப்போர் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரித்து உள்ளனர். இதனால், மீண்டும் கோவிலுக்கு செல்லும் பாதை குறுகலாகி நெரிசல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, கோவிலுக்கு எதிரே கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி