இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவரை மீண்டும் கட்ட பெற்றோர் கோரிக்கை
உத்திரமேரூர்:கடல்மங்கலத்தில் இடிக்கப்பட்டுள்ள பள்ளி சுற்றுச்சுவரை மீண்டும் அமைக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்தில் இருந்த ஊராட்சி கட்டடம், இரண்டு ஆண்டுக்கு முன் பொக்லைன் இயந்திரத்தின் வாயிலாக கட்டடம் இடிக்கப்பட்டது.அப்போது, பொக்லைன் இயந்திரத்தை உள்ளே கொண்டு வருவதற்காக சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் இதுவரைக்கும் கட்டப்படாமல் உள்ளது.இதனால், பள்ளிக்கு அருகில் உள்ள செடி, கொடிகளில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் அடிக்கடி வருகின்றன. மேலும், கால்நடைகளும் உள்ளே வந்து இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றன.எனவே, கடல்மங்கலத்தில் இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவரை மீண்டும் கட்ட, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.