கம்பன் கால்வாய் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் விரிசல் தரமில்லாத கட்டுமான பணி என மக்கள் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம்:தரமில்லாத கட்டுமான பணிகளால், கம்பன் கால்வாய் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில், விரிசல் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில், கம்பன் கால்வாய் நீர்வழித்தடம் துவங்குகிறது. அங்கிருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், தைப்பாக்கம், கூரம், பெரியகரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக, 44 கி.மீ., கடந்து, ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடைகிறது. வடகிழக்கு பருவமழை மற்றும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, கம்பன் கால்வாயில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். இதுபோன்ற நேரங்களில், மதுரமங்கலம், சிங்கில்பாடி, நெல்வாய் - தண்டலம் ஆகிய கிராமங்களின் வழியாக செல்லும் போது, வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். திட்ட மதிப்பீடு காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் இருந்து, மதுரமங்கலம், ஏகனாபுரம், பரந்துார், கொட்டவாக்கம் வழியாக பள்ளூருக்கு செல்லும் தனியார் தொழிற்சாலை பேருந்துகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிங்கிலிபாடி, நெல்வாய் ஆகிய கிராமங்களின் குறுக்கே செல்லும் கம்பன் கால்வாய் கடக்க முடியாது. இதுபோன்ற காலங்களிலும், கிராம மக்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில், சிங்கிலிபாடி கூட்டு சாலை அருகே பாலம் கட்ட வேண்டும் என, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி நிர்வாகத்தின் பரிந்துரைப்படி, புதிய பாலம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி, நபார்டு திட்டத்தின் கீழ், 4.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த 2023ம் ஜூன் மாதம், 52 மீட்டர் நீளம் மற்றும் 15 மீட்டர் அகலத்திற்கு பாலம் கட்டுமானப் பணிகள் துவக்கி, கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவு பெற்று, வாகன போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. பணிநிறைவு பெற்று மூன்று மாதங்களில், பாலத்திற்கும், சாலை இணைக்கும் பகுதிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, பாலத்தின் மீது போடப்பட்ட தார் சாலை, ஆங்காங்கே பெயர்ந்து மீண்டும் செப்பணிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமையவிருக்கும் பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, 20 கிராமங்களில், 5,320 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. தனியாரிடம் இருக்கும், 3,331 ஏக்கர் நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்து பணம் வழங்கும் பணியை, தமிழக அரசின் தொழில் வளர்ச்சி கழகம் துவக்கியுள்ளது. இந்த பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு கையகப்படுத்தும் நிலத்தில், 4.28 கோடி ரூபாய் செலவில் கட்டிய புதிய பாலம் வீணாகும் சூழல் உள்ளது என, எதிர்ப்பு உள்ளது. இதுபோன்ற நேரத்தில், சாலை சேதம், பாலத்தில் விரிசல் என, பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துஉள்ளது. அரசு மறுப்பு இதுகுறித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்திற்கு தேவையான கட்டடம், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க அரசு மறுப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், சிங்கிலிபாடி கூட்டு சாலையில் 4.28 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டி உள்ளது. பரந்துார் விமான நிலைய திட்டத்தில் 6 கி.மீ., துாரம் கம்பன் கால்வாய் அடிபடும் போது, இந்த பாலமும் அடிபடும். இதுபோன்ற சூழல் இருக்கும் போது, பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் என்ன பதில் கூறப்போகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பாலம் ஒப்புதல் குறித்து எங்களுக்கு தெரியாது. சேதம் என கூறப்படும் பாலத்தை ஆய்வு செய்துவிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்' என்றார்.