சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் சிறுபாலம் வலுவிழக்கும் அபாயம்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மஞ்சள்நீர் கால்வாய் சிறுபால சுவரில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால், நாளடைவில் பாலம் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரில் மழைநீர் வெளியேறும் வகையில், மஞ்சள் நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள, புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மஞ்சள்நீர் கால்வாய் குறுக்கிடும் இடத்தில் கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தின் சுவரில், அரசமர செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகள் வேரூன்றி வளர்வதால், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், சிறுபாலம் முழுதும் வலுவிழுந்துள்ளது. எனவே, மஞ்சள்நீர் கால்வாய் சிறுபால சுவரில் வளரும் அரச மரச்செடிகளை வேருடன் அகற்றி, விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.