தேரோட்ட வழக்கில் நாளை தீர்ப்பு புத்தகரத்தில் போலீஸ் குவிப்பு போலீசார் பாதுகாப்பு அதிகரிப்பு
வாலாஜாபாத்:புத்தகரம் அம்மன் கோவில் தேரோட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நாளை வெளியாக உள்ள நிலையில், அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாலாஜாபாத் ஒன்றியம் புத்தகரம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் முத்து கொளக்கியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் விழாவில் அம்மன் தேர் வீதியுலா நடப்பது வழக்கம். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தேர் பழுது காரணமாக, தேரோட்டம் இல்லாமல் விழா நடக்கிறது. இதனிடையே, இக்கோவிலுக்கு பொது நல நிதியின் கீழ், 28.40 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் செய்யப்பட்டு, கடந்த 5ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடத்த திட்டம் இருந்தது. இதனிடையே, ஆதிதிராவிடர் பகுதியில் தேர் வருவது தொடர்பாக, அக்கிராமத்தின் இரு பிரிவினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மறு விசாரணை இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், ஆதிதிராவிடர் தெருவில் தேர் உலா வரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புத்தகரத்தில் தேர் செல்ல பாரம்பரியமாக பயன்படுத்தக்கூடிய தேரோட்ட வீதிகள் உள்ளனவா என்பது குறித்து, மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் மறு விசாரணையை செப்., 15க்கு தள்ளி வைத்து, தேர் வெள்ளோட்டத்திற்கு தடை செய்யப்பட்டது. இதனிடையே, கடந்த 6ம் தேதி இரவு மர்ம நபர்கள் கோவில் தேரை எரிக்க முயன்றது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, மாவட்ட எஸ்.பி.,யிடம் இரு தரப்பினர் அளித்த புகாரில் விசாரணை நடந்து வருகிறது. பாதுகாப்பு இந்நிலையில், புத்தகரம் கோவில் தேர் வெள்ளோட்டம் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருவதால், தீர்ப்பு என்னவாக இருக்கும் என இரு தரப்பினர் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனால், அக்கிராமத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர் நிறுத்தம் செய்துள்ள முத்து கொளக்கியம்மன் கோவில் பகுதி, பிள்ளையார் கோவில் தெரு, ஊராட்சி தொடக்கப்பள்ளி தெரு, ஆதிதிராவிடர் குடியிருப்பு தெரு மற்றும் மருதம் கூட்டுச்சாலை உள்ளிட்ட இடங்களில், 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.