சென்னை:சென்னையில் இரண்டாவது கட்டமாக, மூன்று வழித்தடங்களில் 118 கி.மீ., துாரத்திற்கு 61,843 கோடி ரூபாயில் மெட்ரோ திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.இத்திட்டத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் மெட்ரோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.மூன்று வழித்தடங்களில் பணிகள் முடிந்ததும், ஓட்டுனர் இல்லாத 138 ரயில்களை இயக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.முதற்கட்டமாக, ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மூன்று பெட்டிகளை உடைய 36 மெட்ரோ ரயில்களை உருவாக்கும் ஒப்பந்தம், 'அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட்' நிறுவனத்துடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வாயிலாக, 108 மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:மூன்று வழித்தடங்களில் பணி முடித்து, வரும் 2028ல், சென்னையின் அனைத்து நகரிலும் மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும். நியாயமான கட்டணத்தில், பயணியர் விரைவாக பயணம் செய்ய முடியும்.பயணியரின் தேவைக்கு ஏற்றார் போல், மூன்று அல்லது ஆறு பெட்டிகள் உடைய ரயில்கள் இயக்கப்படும். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ரயில்கள் இயக்கத்திற்கு சி.பி.டி.சி., எனப்படும் 'கம்யூட்டர் பேஸ்டு டிரெய்ன் கன்ட்ரோல் சிஸ்டம்' என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் செல்லும். இதனால் அதிகபட்சமாக 90 நொடிகளுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்க முடியும். ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க, இந்த சிக்னல் தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது.இந்த ரயிலில், பயணியர் வசதியாக நிற்க இடவசதி, கூடுதல் 'சிசிடிவி' கேமராக்கள், மொபைல், லேப்டாப்களுக்கு 'சார்ஜிங்' வசதிகளும் அமைக்கப்படும். அதேபோல், மெட்ரோ ரயிலின் முன் மற்றும் பின்புற முகப்பு பகுதியில் பெரிய அளவிலான அவசர கால கதவுகள் அமைக்கப்படும்.இந்த கதவுகள் சற்று அகலமாக இருக்கும் என்பதால், அவசர காலத்தில் பயணியர் வேகமாக வெளியேற முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.