மாங்காடு சி.டி.ஏ., கார்டனில் 20 நாளாக மழைநீர் தேக்கம்
குன்றத்துார்:குன்றத்துார் அருகே, மாங்காடு நகராட்சியில் சி.டி.ஏ., கார்டன் நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. சமீபத்தில் கொட்டி தீர்த்த மழையால், குடியிருப்பை சுற்றி 20 நாட்களுக்கு மேலாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.குறிப்பாக, சி.டி.ஏ., கார்டன் பிரதான சாலை மழை நீரில் மூழ்கியுள்ளதால், அந்த வழியே செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஆண்டுதோறும் மழைக்காலத்தில் குடியிருப்பு பகுதயில் மழை நீர் தேங்கி நீண்ட நாட்களாக வடியாமல் உள்ளது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் ஆபத்து உள்ளது. மழை நீர் வெளியேற்ற, மாங்காடு நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.