உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடிகால்வாய், உறிஞ்சு குழியில் அடைப்பு சாலையில் குளம்போல தேங்கும் மழைநீர்

வடிகால்வாய், உறிஞ்சு குழியில் அடைப்பு சாலையில் குளம்போல தேங்கும் மழைநீர்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உறிஞ்சு குழிகளையும், வடிகால்வாயையும் துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மழைநீர் வெளியேறும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையோரம் வடிகால்வாய் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், ராஜாஜி மார்க்கெட் அருகில், மழைநீர் குளம்போல தேங்கு வதால், மழைநீர் முழுமையாக வெளியேறும் வகையில், மாநகராட்சி சார்பில், நான்கு மழைநீர் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முறையான பராமரிப்பு இல்லாததால், வடிகால்வாய் மற்றும் மழைநீர் உறிஞ்சு குழிகளிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் வெளியேற வழியின்றி, சாலையில் குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்லும் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வேகமாக செல்லும் வாகனங்களால் மழைநீர் தெளிப்பதால், பாதசாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். நாள் கணக்கில் தேங்கும் மழைநீரில் டெங்குவை பரப்பும் 'ஏடிஸ்' கொசு உருவாகும் சூழல் உள்ளது. எனவே, ரயில்வே சாலையில் மழைநீர் முழுதும் வெளியேறும் வகையில், வடிகால்வாயையும், மழைநீர் உறிஞ்சு குழிகளையும் சீரமைக்க, மாநகராட்சியும், நெடுஞ்சாலைத் துறையும் ஒன்றிணைந்து நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !