உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி நத்தப்பேட்டை ஏரியில் அரிய வகை பறவைகள் முகாம்

காஞ்சி நத்தப்பேட்டை ஏரியில் அரிய வகை பறவைகள் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம், நத்தப்பேட்டை ஏரியில், முதல்முறையாக புள்ளி கானாங்கோழி உள்ளிட்ட அரியவகை பறவைகள் முகாமிட்டு இருப்பது, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.ஐரோப்பிய நாடுகளில் குளிர் அதிகரிக்கும்போது, அங்குள்ள பறவைகள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்வதும், தமிழகத்தில் உள்ள சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளில் முகாமிடுவதும் வழக்கம்.இந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள நத்தப்பேட்டை ஏரியில், மஞ்சள் குருகு, கருங் குருகு, செங்குருகு, பேதை உள்ளான் போன்ற, வெளிநாட்டுபறவைகள் முகாமிடுவது வழக்கம்.காஞ்சிபுரத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு அப்பால், பல்வேறு நீர் நிலைகளில் வெளிநாட்டு பறவைகள் வருகை குறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பினர் கண்காணித்து வருகின்றனர்.மிக அரிதாக காணப்படும், 'ஸ்பாட்டட் கிரெக்' எனப்படும் புள்ளி கானாங்கோழி, பேலியன் கானாங்கோழி ஆகிய வலசை பறவைகள், நத்தப்பேட்டை ஏரியில் முகாமிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:நத்தப்பேட்டை ஏரியில் முதல்முறையாக புள்ளி கானாங்கோழி, பேலியன் கானாங்கோழி பறவைகள் வந்துள்ளன. எங்கள் அமைப்பை சேர்ந்த கவுதமன், பழனிஆண்டவன் ஆகியோர் இப்பறவைகளை முதல்முறையாக கண்டுபிடித்து ஆவணப்படுத்தினர். சதுப்பு நிலங்களில் மட்டுமே காணப்படும் புள்ளி கானாங்கோழி, தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன், சேலம் மற்றும் ஓசூரில் வந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் தற்போது, காஞ்சிபுரம் நத்தப்பேட்டை ஏரிக்கு வந்திருப்பது அரிதான விஷயம்.ஐரோப்பா, ரஷ்யா போன்ற பகுதிகளில் இருந்து இப்பறவைகள் இந்தியாவுக்கு வந்துள்ளன. எப்போதும் ஜோடியாக காணப்படும் இப்பறவைகளில் ஒன்று மட்டுமே, தற்போது புகைப்பட ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.சிறிய வகை நீர்ப்பறவையான புள்ளி கானாங்கோழி, பேலியன் கானாங்கோழி ஆகியவை இங்கு இருப்பதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.இத்துடன், செம்மார்பு கானாங்கோழி, சாம்பல் மார்பு சம்பங்கோழி, தண்ணீர் கோழி ஆகிய பறவைகளும் இங்கு முகாமிட்டுள்ளன.இது போன்ற நீர்நிலைகளை, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை