உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரும்புலியூர் பாலாறு கால்வாயில் தாழ்வான பகுதி சீரமைப்பு

அரும்புலியூர் பாலாறு கால்வாயில் தாழ்வான பகுதி சீரமைப்பு

அரும்புலியூர்: அரும்புலியூர் ஏரிக்கான பாலாற்று கால்வாயின் சேதமான கரை பகுதிகளில் மணல் மூட்டைகள் போட்டு சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படு கிறது. உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டிலான 690 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி, மழைக் காலத்தில் முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரை கொண்டு அரும்புலியூர், சீத்தாவரம், காவணிப்பாக்கம், கரும்பாக்கம் பகுதிகளில் உள்ள, 1,000 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும். இந்த ஏரிக்கு பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் இருந்து பிரிந்து செல்லும் துணைக் கால்வாய் உள்ளது. இத்தடுப்பணை நிரம்பி வழிந்தால், இக்கால்வாய் வாயிலாக தண்ணீர் சென்று, அரும்புலியூர் ஏரி நிரம்ப வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலாற்று தடுப்பணையில் இருந்து, அரும்புலியூர் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் கரையின் குறிப்பிட்ட ஒரு பகுதி மண் அரிப்பால் தாழ்வான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏரிக்கு பாலாற்று கால்வாய் வாயிலாக வரும் தண்ணீர் தாழ்வான கரைப்பகுதி வழியாக ஆற்றில் மடை மாறி செல்லும் நிலை உள்ளது. இதனால், நடப்பாண்டு பருவ மழைக்கு சமீபத்தில் பாலாற்றில் வெள்ள பெருக்கெடுத்தும் அரும்புலியூர் ஏரிக்கு தண்ணீர் சரிவர சென்றடையாத நிலை உள்ளது. இதையடுத்து, அக்கால்வாயின் தாழ்வான பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி சமப்படுத்த அரும்புலியூர் ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் தீர்மானிக்கப்பட்டு அதற்கான பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !