உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருவங்கரணை ஊராட்சி அலுவலக கட்டடப் பணியை முடிக்க கோரிக்கை

திருவங்கரணை ஊராட்சி அலுவலக கட்டடப் பணியை முடிக்க கோரிக்கை

வாலாஜாபாத்: திருவங்கரணையில் ஊராட்சி அலுவலகத்திற்கான புதிய கட்டடப் பணி துவங்கிய நிலையிலேயே நிறுத்தப்பட்டு உள்ளதால், விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது. வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது திருவங்கரணை ஊராட்சி. இந்த ஊராட்சி அலுவலகம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் இயங்கியது. அக்கட்டடம் மிகவும் பழுதடைந்து பயன்பாட்டிற்கு லாய்கற்றதாக இருந்தது. மழைக்காலத்தில் அக்கட்டட தளத்தின் வழியாக நீர் சொட்டும் நிலை ஏற்பட்டது. இதனால், ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் ஏற்படுத்த ஊராட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு முன் அலுவலக கட்டடத்திற்கான முதற்கட்ட பணியாக அடித்தளம் அமைத்தல் பணி துவங்கப்பட்டது. அதையடுத்து, நான்கு மாதங்களாக அடுத்தகட்ட பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பணியை மீண்டும் துவங்கி விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறியதாவது: திருவங்கரணையில், ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும் அவ்விடம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு விசாரணையில் உள்ளது. அப்பிரச்னை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தில் உள்ளதால் பணி துவங்குவது குறித்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை